இன்றும் மூதூரில் 9 பாடசாலைகள் செயலிழப்பு!

பெரியவெளி பாடசாலையில் மூன்று மாணவிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து இன்றும் மூதூர் தெற்கிலுள்ள ஒன்பது பாடசாலைகள் இயங்கவில்லை. மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தராது, பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். அப்பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் மாத்திரம் பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்தனர். இதனால், பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதிருந்தன.

பெரியவெளிக் கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகள் சிலர், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. இது இவ்வாறிருக்க, ‘குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படும்வரை மாணவச் சமூதாயத்தின் போராட்டம் தொடரும்’ என்று எழுதப்பட்ட அநாமதேய சுவரொட்டிகள், சில பாடசாலைகளில் ஒட்டப்பட்டுக் காணப்பட்டன.

இதனிடையே, பாடசாலை மாணவிகள் மூவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தில் நேற்றைய தினமும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களும் இன்று மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். சம்பவம் தொடர்பான வழக்கு மூதூர் நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி மொஹமட் ரிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் மூன்று பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதனால் குறித்த வழக்கை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதாக நீதிவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அன்றைய தினம் சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கான அடையாள அணிவகுப்பும் இடம்பெறும் என்று நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்மாணவிகள் வன்புணர்வு
Comments (0)
Add Comment