இரணைமடு இராணுவமுகாமுக்கு வரநேரிடும்! எச்சரித்த சிங்களச் சிப்பாய்

கிளிநொச்சி நகரை அண்டிய சில பகுதிகளில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வியாபார நிலையங்களின் முழுமையான பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வியாபார நிலையங்களில் இன்று புதன் கிழமை ஒவ்வொரு வியாபார நிலையமாக சென்ற இரண்டு இராணுவத்தினர் கடையின் பெயர், உரிமையாளரின் பெயர், தொலைபேசி இலக்கம், கிராம அலுவலர் பிரிவு, கடையில் பணியாற்றுவர்களின் எண்ணிக்கை, கடை உரிமையாளரின் வீட்டு முகவரி, குடும்ப அங்கத்தவர்கள், என்ன வகையான வியாபாரம், உள்ளிட்ட பல தகவல்களை பதிந்து செல்கின்றனர்.

அந்த வகையில் இன்று (20-04-2016) காலை பதினொரு மணியளவில் பல்பொருள் வியாபார நிலையம் ஒன்றுக்கு சென்ற இரு இராணுவ சிப்பாய்கள் கடை உரிமையாளரிடம் மேற்படி தகவல்களை கேட்ட போது குறித்த கடை உரிமையாளர் ஏன் நீங்கள் தகவல் பெறுகின்றீர்கள்? இப்பொழுதும் நாங்கள் இராணுவத்தின் கீழ்தானா இருக்கின்றோம்? இப்படி எத்தனை தடவைகள் பெற்றுள்ளீர்கள்? சிவில் நிர்வாக நடவடிக்கையில் பொலீஸார் இருக்க நீங்கள் ஏன் தலையிடுகின்றீர்கள் என பல கேள்விகளை கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த இராணுவ சிப்பாய் ஒருவர் பொலீஸ் இருந்தாலும் நாங்களும் இருக்கின்றோம். எங்களுக்கு கீழ்தான் இங்கு எல்லாம் உள்ளது. எங்களுக்கு எங்களின் மேலிடத்து உத்தரவின் படியே தகவல்களை பெற்று வருகின்றோம் உங்களுக்கு தகவல்களை தருவதில் பிரச்சினை என்றால் இரனைமடு முகாமுக்கு அனுப்ப வேண்டி வரும் என கடும் தொனியில் எச்சரித்துள்ளதோடு எல்லா கடை உரிமையாளர்களும் தகவல்களைத் தரும் போது உங்களுக்கு மட்டும் என்ன பிரச்சினை நாங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தகவல்களை பெறுகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மரணம் ஒரு தடவைதான் இதற்கு எல்லாம் நான் பயந்தவன் அல்ல எனவும் நீங்கள் விரும்பிய போதெல்லாம் விபரம் தரமுடியாது என்றும் கூறியுள்ளார். இருந்தும் விடாப்பிடியாக நின்ற இராணுவத்தினர் கடை பற்றியும் உரிமையாளர் பற்றியும் தகவல்களை பதிந்து சென்றுள்ளனர்.

தாங்கள் உதயநகர் கிழக்கு, மேற்கு ஆனந்தநகர் ஆகிய பிரதேசங்களில் உள்ள கடைகள், தனியார் கல்வி நிலையங்கள், நிறுவனங்கள் போன்றவற்றின் விபரங்களை பெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர்.

இரணைமடுஇராணுவப் பதிவுஇராணுவமுகாம்
Comments (0)
Add Comment