இருகைகளாலும் பந்து வீசி அசத்தும் கமிந்து மெண்டிஸ்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் 27ஆவது ஓவரில் பந்து வீச ஆரம்பித்த சுழல்பந்து வீச்சாளர் கமிந்து மெண்டிஸ், வலது கை துடுப்பாட்டவீரர்களுக்கு இடது கையால் பந்துவீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ரன் அவுட் முறையில் உமைத் மசூர் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து இடது கை துடுப்பாட்ட வீரர் சல்மான் ஃபயாஸுக்கு தனது வலது கையால் கமிந்து மெண்டிஸ் பந்து வீசினார்.    இவர் இந்தப் போட்டியில் வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு இடது கையாலும் இடது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு வலது கையாலும் பந்துவீசி இரசிகர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தினார்.   வழமையாகவே கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடிய ஆற்றல் மிக்கவர்.

இவர் ஒரு சகலதுறை ஆட்டக்காரராவார். பாகிஸ்தானுடனான போட்டியில் இவர் மூன்றாம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடி 68 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால் இவர் ஆட்டமிழந்த பின்னர் இலங்கை சரிவை நோக்கிச் சென்று 23 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.   ‘‘பயிற்சிகளின்போது நான் இரண்டு கைகளாலும் பந்துவீசிப் பழகுவேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் புனித ஜோசப் கல்லூரிக்கு எதிரான 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கட் போட்டியின்போதே நான் முதன்முதலில் இரண்டு கைகளாலும் மாறிமாறி பந்துவீசினேன்.

அப் போட்டியில் நான்கு விக்கட்களை வீழ்த்தினேன்’’ என்றார் காலி றிச்மண்ட் கல்லூரி வீரரான கமிந்து மெண்டிஸ்.   19 வயதுக்குட்பட்ட இலங்கை அணித் தலைவர் சரித் அசலன்க றிச்மண்ட் கல்லூரி கிரிக்கட் அணியினதும் தலைவராவார்.   ஒரு வருடத்திற்கு முன்னர் பாடசாலை கிரிக்கெட்  ஒன்றின்போது அவரது ஆற்றலை கனிஷ்ட கிரிக்கட் அணி தெரிவாளர்கள் இனங்கண்டனர்.   அவரது ஆற்றல்களை பலதடவைகள் பரீட்சித்த பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிக்கான இலங்கை குழாமில் அவரை இணைத்துக்கொண்டனர்.

‘‘இரண்டு கைகளாலும் அவர் சிறப்பாக பந்துவீசக்கூடியவர். அத்துடன் 17 வயதுடைய அவர் எந்த நிலையிலும் துடுப்பெடுத்தாடும் ஆற்றல் மிக்கவர். கமிந்துவைப் பொறுத்த மட்டில் அவரிடம் காணப்படும் விசேட தன்மை இது’’ என இலங்கை கனிஷ்ட கிரிக்கட் தெரிவுக் குழு உறுப்பினர் ரஞ்சன் பரணவித்தான தெரிவித்தார்.   இதற்கு முன்னர் ஹஷான் திலக்கரட்ன, 1996 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டி ஒன்றில் இரண்டு கைகளாலும் பந்துவீசியிருந்தார்.   அஸ்கிரிய மைதானத்தில் நடைபெற்ற கென்யாவுக்கு எதிரான உலகக் கிண்ண குழுநிலைப் போட்டியின்போது ஹஷான் திலக்கரட்ன இந்த அரிய ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். ஹஷான் திலக்கரட்ணவுக்குப் பின்னர் சர்வதேச அரங்கில் இத்தகைய அபூர்வ ஆற்றலை வெளிப்படுத்திய இரண்டாவது இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் ஆவார்.

இருகைகள்இலங்கைகமிந்து மெண்டிஸ்கிரிகட்பாக்கிஸ்தான்போட்டி
Comments (0)
Add Comment