உலக டூர் ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோகோவிச், ஜப்பானின் கீ நிஷிகோரியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள வீரர்கள் மட்டமே பங்கேற்கும் இப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச், 6-1, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதனால், இந்தத் தொடருக்கு முன்னேறிய முதல் ஆசிய வீரரான நிஷிகோரி ஏமாற்றத்துடன் வெளியேறினார். வெற்றிக்குப் பின் ஜோகோவிச் கூறுகையில், “கீ (நிஷிகோரி) சிறந்த வீரர். அவரது வாழ்வில் இந்த சீசன் சிறப்பாக அமைந்தது. ஆனால், மூன்றாவது செட்டில் அவர் டபுள் ஃபால்ட் செய்தார்.
இது எனக்கு சாதகமாக அமைந்தது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தை, “பாப் கார்ன்’ சாப்பிட்டுக் கொண்டே பார்ப்பேன்’ என்றார். மற்றொரு அரையிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், வாவ்ரிங்கா ஆகியோர் மோதவுள்ளனர்.
இதில் வெற்றி பெறுபவர் இறுதிச் சுற்றில் ஜோகோவிச்சுடன் மோதுவார். இதுவரையிலும் இந்தத் தொடரில் ஜோகோவிச் மூன்று முறை பட்டம் வென்றுள்ளார். அவர், ஏற்கெனவே இந்த சீசனின் முடிவில் தரவரிசையில் முதலிடம் பிடித்தவர் என்ற பெருமையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.