ஈழத் தாய் தந்தையர் கண்ணீருக்கு காரணமான ராஜபக்சவின் புத்திரசோகம்!


அரசன் அன்று கொல்வான்! தெய்வம் நின்று கொல்லும்!! இப்படி ஒரு பழமொழி தமிழில் இருக்கிறது. ஸ்ரீலங்காவும் சரி ஈழமும் சரி ராஜபக்சவின் திருறை புத்திரன் யோசித ராஜபக்சவின் கைது குறித்தே பேசிக் கொண்டிருக்கிறது. என்றைக்கும் நானே ராஜா என்ற கண்ணை மூடிய சர்வாதிகார போதையில் ராஜபக்ச சிங்கள தேசத்திற்கு இழைத்த அநீதிகளுக்கு இப்போது பலன்களை அல்லது வினைகளை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்.

யோசித ராஜபக்சவின் கைதை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய ராஜபக்ச, விரக்தியால் மனமுடைந்திருப்பதை புத்திரசோகத்தால் ஆழமான கவலையில் இருப்பதை ஊடகங்கள் படம் பிடித்து காட்டியுள்ளன. ராஜபக்சவின் கண்ணில் முதன் முதலில் கண்ணீர். ஈழத் தமிழ் இனத்தை இனப்படுகொலை வேட்டையாடி யுத்த வெற்றி மமதையில் அதிகாரச் சிரிப்போடு உலாவந்த ராஜபக்சவின் சிரிப்பு கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் காணாமல் போனது.

இப்போது ராஜபக்சவின் கண்களில் கண்ணீர் கசிகிறது. எந்தக் கொடியவனாக இருந்தாலும் புத்திர சோகம் இயல்பானதே. யோசிதவுக்காக ராஜபக்ச சிந்தும் கண்ணீரை நாம் கேலி செய்யவுமில்லை. நன்றாக கண்ணீர் சிந்தட்டும். ஆனால் தமிழ் ஈழ தாய்மார் எத்தனை ஆயிரம் பேர் ராஜபக்சவால் இன்று கண்ணீர் சிந்துகிறார்கள்? எத்தனை பிள்ளைகளை ராஜபக்சவின் படைகள் காணாமல் போகச் செய்திருக்கின்றன?

ஒரு இனத்தின் பிள்ளைகள் எத்தனையோ ஆயிரம் காணாமல் போயிருக்கிறார்கள். பசிக்குப் பாண் வாங்க கடைக்குச் சென்றவர்கள், பள்ளிக்கூடம் சென்றவர்கள், விளையாட மைதானத்திற்குச் சென்றவர்கள் வீடு வரவில்லை. தெருக்களில் எத்தனை பிள்ளைகள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். எத்தனை பிள்ளைகளை சித்திரவதை செய்து ராஜபக்சக்கள் கொன்று இன அழிப்புச் செய்துள்ளனர்?

தமிழ் இனத்தின் உரிமைக்காக தனி தேசத்திற்காக இளைஞர்கள், யுவதிகள் போராடுகிறார்கள் என்பதற்காக தமிழ் ஈழ தேசனத்தின் பிள்ளைகளை தேடித் தேடி அழித்து, காணாமல் போகச் செய்து, சிறையில் அடைத்து ராஜபக்ச நடத்திய அட்டூழியங்களால் தமிழ் ஈழத் தேசத் தாய் எப்படி கண்ணீர் சிந்தியிருப்பாள்? எப்படி வலியால் துடித்திருப்பாள்?

தமிழ் ஈழ மண் மறக்காது. விபூசிகா மற்றும் பாலேந்திரன் ஜெயக்குமாரியை. தன்னுடைய பிள்ளை உயிருடன் இருக்கிறான். ராஜபக்ச அரசு வெளியிட்ட புனர்வாழ்வு பெரும் போராளிகளின் படத்தில் தன் மகன் உயிருடன் இருப்பதை கண்டேன் என்று ஆதாரத்துடன் போராடிய அப்பாவிப் பெண்ணை, அப்பாவி சிறுமி விபூசிகாவை சிறையில் வைத்தது ராஜபக்ச அரசு. கண்ணீர் விட்டு வாய் விட்டு அழுதமைக்காகவே அவர்களை சிறையில் அடைத்தது.

தமிழ் ஈழத்தில் இன்றைக்கும் தாய்மாரின் கண்ணீர் சிந்தல் தொடர்கிறது. தெருக்களில் வீழ்ந்து கிடந்து தங்கள் பிள்ளைகளை விடுவிக்குமாறு அழுது குளறுகிறார்கள். ராஜபக்ச என்ன சொல்லுகிறார்? சிறைகளில் உள்ளவர்களை விடுதலை செய்யாதீர்கள் என்கிறார். சிறையில் உள்ள அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்தால் தமிழீழம் மலர்ந்துவிடும் என்கிறார்.

ஆயிரம் ஆயிரம் தாயமார்களின் தந்தையர்களின் கண்ணீரோடு ராஜபக்ச விளையாடினார். இனவாத்திற்காகவும் தன்னுடைய அரசியல் இருப்பிற்காகவும் சர்வாதிகாரத்திற்காகவும் அதிகார வெறிக்காகவும் தமிழ் ஈழ தந்தையர், தாயரின் கண்ணீருக்கு காரணமான ராஜபக்ச இப்போது தன்னுடைய பிள்ளைக்காக கண்ணீர் சிந்துகிறார். தன்னுடைய பிள்ளையை தடுப்பில் தடுத்து வைக்கிறார்கள் என்பதற்காக கண்ணீர் சிந்துகிறார்.

ராஜபக்ச இப்போது அறுவடை செய்வது சிங்களவர்களுக்கு இழைத்த அநீதிகளுக்காக. சிங்கள தேசத்தில் நடந்த ஊழல்கள் மோசடிகளுக்காகவே அவர் தண்டனைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். ஈழத் தமிழர மிக கொடிய இன அழிப்புமுறையில் படுகொலை செய்து பெற்ற யுத்தவெற்றியை கொண்டாடி மகிழ்ந்த மகிழச்சியை காட்டிலும் பன்மடங்கு தோல்வியை, துயரத்தை ராஜபக்ச இன்றைக்கு அறுவடை செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் இன்னமும் ராஜபக்ச ஈழத் தமிழருக்கு செய்த அநீதிகளுக்குரிய தண்டனையை அறுவடை செய்யவில்லை. நமது முன்னோர்களின் நம்பிக்கையின்படி அவரவர் செய்யக் கூடிய கர்ம வினைகளை அறுவடை செய்தே தீருவர். அதற்கு ராஜபக்சவே நல்ல உதாரணம். தமிழ் ஈழ தாய்மார், தந்தையர் ராஜபக்சவுக்கு விடுத்த சாபத்தை அறுவடை செய்யும்போது ராஜபக்சவுக்கு இப்போதிருக்கும் கண்ணீரும் இருக்காது.

தமிழ் ஈழத் தாய்மாரை, தந்தையரை, சனங்களை கண்ணீர் விடவும் வாய்விட்டு அழவும் விடாத ராஜபக்ச இப்போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது காலத்தின் நியதியே. தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்! தர்மம் மறுபடி வெல்லும்!

ஆசிரியர்

செண்பகம்

01.02.2016

இனப்படுகொலைகண்ணீர். ஈழத் தமிழ் இனம்புத்திரசோகம்மகன் கைதுராஜபக்ச
Comments (0)
Add Comment