உள்ளகப் பொறிமுறையால் நீதியான விசாரணை நடைபெற முடியாது என்ற அறிக்கையின் முடிவானது மிகவும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும் என்றும், ஆகவே உண்மை கூறல் செயன்முறை மட்டும் போதாது நீதிச் செயன்முறையும் அவசியம் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரது உரையில்,
ஐ. நா சபைத் தீர்மானத்தையும், ஐ. நா மனித உரிமை ஆணையாளரது விசாரணை அறிக்கையையும் உடலகம, பரணகம ஆணைக்குழுக்களின் அறிக்கைகளையும் இவ்வவையில் கௌரவ பிரதமர் சமர்ப்பித்துள்ளதை நான் வரவேற்கிறேன்.
உடலகம, பரணகம ஆணைக்குழுக்களின் அறிக்கை தொடர்பில் நான் பெரிதும் கரிசனை கொள்ளப் போவதில்லை. இவ்விரண்டு ஆணைக்குழுக்களும் செயற்பட்ட விதம் தொடர்பில் உள்ளூர், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் அமைப்புக்களும் எமது கட்சியும் மிகவும் பாரதூரமான விமர்சனங்களை முன் வைத்திருந்தோம். முந்தைய அரசாங்கமும் தற்போது நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற அரசாங்கமும் இவ்வாறான ஆணைக் குழுக்களின் அறிக்கைகளின் உள்ளடக்கத்தில் செல்வாக்கு செலுத்தி, தாம் எதிர்நோக்கும் சர்வதேச சவால்களை வெற்றி கொள்ள அவற்றை உபகரணங்களாக பயன்படுத்தியுள்ளன.
உதாரணமாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் (LLRC) அறிக்கையை முந்தைய அரசாங்கம் எவ்வாறு தனக்கேற்றவாறு சர்வதேச மட்டத்தில் பயன்படுத்தியது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
பெரும்பாலும் இந்த அறிக்கைகள் பொய் கூறும் தன்மையின. உதாரணமாக பரணகம அறிக்கை யுத்தத்தின் இறுதி 12 மணித்தியாலங்களில் இடம் பெற்ற சிவிலியன் படுகொலைகளுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்று ஒரு அப்பட்டமான பொய்யைச் சொல்லி அரசாங்கத்தைக் காப்பாற்ற முயற்சித்துள்ளது. சொல்கின்ற பொய்யை பூசிமெழுகுவதற்காக சில முன்னேற்றகரமான விடயங்களை இவ்வறிக்கைகள் உள்ளடக்கி சர்வதேசத்தை திருப்திப் படுத்த முயற்சிப்பதும் அதன் பின்னர் அவற்றை கிடப்பில் போடுவதும் வழமையாகிவிட்டது. ஆகவே இந்த அறிக்கைகளின் முடிவுகள் தொடர்பில் பெரிதும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஐ. நா மனித உரிமை ஆணையாளரின் விசாரணை அறிக்கை முடிவுகள் முக்கியமானவை. இவ்வறிக்கை ஒரு முழுமையான அறிக்கையாக கொள்ளப்பட முடியாவிட்டாலும் நீதி விசாரணைக்கான நீண்ட பாதையில் இவ்வறிக்கை ஓர் முக்கிய இடத்தை வகிக்கும் என எமது மக்கள் நம்புகின்றனர். எம்மைப் பொறுத்தவரையில் உள்ளகப் பொறிமுறையால் நீதியான விசாரணை நடைபெற முடியாது என்ற அறிக்கையின் முடிவு முக்கியமானது.
அத்தோடு குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்று நடைபெற வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்துவதும் முக்கியமானது. ஆகவே உண்மை கூறல் செயன்முறை மட்டும் போதாது நீதிச் செயன்முறையும் தேவை என்பது இதன் மூலம் பெறப்படுகின்றது. வெறுமனே இலங்கையின் நீதித்துறையில் உள்ள குறைபாடுகளால் உள்ளகப் பொறிமுறையை நம்ப முடியாது என்பதை விட ஒரு நீதியான விசாரணையை முன்னெடுப்பதற்கான அரசியல் விருப்பு இலங்கையில் எந்தவொரு அரசாங்கத்திற்கும் இருந்ததில்லை என்பதே உண்மையானதாகும். இவ்வாறு தனது உரையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.