உன்னத நம்பிக்கை..

அங்குலமங்குலமாய்க் காதல்செய்து
ஆறுயிராய் நேசித்து, ஆசையாய் அடியெடுத்து நடந்து, ஆக்கிரமிக்கும் நினைப்புகளுக்கெல்லாம் அடிகொடுத்து,
படித்துத்துப்படித்து இதுதான் “நம் வாழ்வென்று” சொல்லித்தந்து தன் சிறகால் அரவணைத்த அந்தத் தாய்ப்பறவை, இருள்சூழ்ந்த இந்நாட்களில் என்னவெல்லாம் எண்ணி, எப்பாடுபட்டிருக்கும்…?

களணி கருக்கிக் காட்டையெரித்து, கடுந்தீ கூட்டை நெருங்கிச் சூழுகையில், காலைச்சுற்றிக் கரு(ணா)நாகம் கயமை புரிய நஞ்சை உமிழ்ந்து வீட்டை எரிக்கையில், கூட்டிலிருந்த குஞ்சுகளும், கொடை கொடுத்துக் காத்த கருமுட்டைகளும், காக்கும்வழி எதுவென்று என்னவெல்லாம் நினைத்திருக்கும்…?

அத்தனைபெருந்தீயினின்று, உந்திப்பறக்கச் சிறகிருந்தும், தன்னையும் அப்பெருந்தீக்குள் எரிக்கத் துணிந்தபடி அங்குலம் நகராமல் நின்றுபோராடும் துணிவை விதைத்து, குஞ்சுகள் அலகுதீட்டித் தீப்பறவைகளா மாறும் நெஞ்சுரம்தந்து விஞ்சிநின்று விடுதலைமேன்மை செய்தது
அத்தாய்ப்பறவை…

கிட்டவந்த பெருந்தீ, தாயப்பறவையின் சிறகுகள் ஒவ்வொன்றாய்ச் சுட்டெரித்த வேளையிலும், விட்டெறிந்துவிடா இலட்சியப் பற்றுறுதியோடு, வீழ்ந்த பறவைகளையும் விதைகளாக்கி, விடுதலை மாண்பு செய்து, தன்குஞ்சுகள் ஒவ்வொன்றையும் தீ உமிழும் பறவைகளாக்கி திசையெல்லாம் பறக்கவிட்டது…

ஒளியொன்றை ஏற்றிவைக்க, அங்கங்கே பறந்துசென்று, தான் ஏற்றிவைத்த எண்ணச்சுடரொளியில், அடைகாக்கும் அத்தனை பறவைகளும் அக்கினிக்குஞ்சுகளாய்க் கூடுகாக்கத் திரும்பிவரும் என்ற அந்த உன்னத நம்பிக்கையில்,
“தீயினின்று மீளாமல் அத்தாய்ப்பறவை தன்னையே அதற்காகுதியாக்கி இலட்சிய வேள்ளவியொன்றை நெஞ்சமெல்லாம் ஏற்றிவைத்தது”

*-காந்தள்_

கவிதைகாந்தாள்தாய்ப்பறவை
Comments (0)
Add Comment