உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி–மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து நாட்டில் நடக்கிறது.
கோப்பையை வெல்ல போவது யார் என்று முன்னாள் வீரர்கள் பலர் ஆரூடம் சொல்லி வருகிறார்கள். உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.
இந்த போட்டி தொடர் இந்தியாவுக்கு உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட உதவும் என்று கேப்டன் டோனி, வி.வி.எஸ்.லட்சுமணன் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு குறைவு என்று நியூசிலாந்து அணி முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
உலக கோப்பையை வெல்ல நான் 4 அணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன். முதலில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
ஏனென்றால் போட்டி தொடர் இந்த நாடுகளில் நடக்கிறது. இது அந்த அணிகளுக்கு சாதகமானது. 3–வது அணியாக தென் ஆப்பிரிக்கா இருக்கிறது. அந்த அணி நல்ல பார்மில் இருக்கிறது.
4–வது இடத்துக்கு கடும் போட்டி இருக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் வேகப்பந்து வீச்சு நன்கு எடுபடும்.
இந்திய வேகபந்து வீச்சு மோசம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் விக்கெட்டுகளை கைப்பற்றுவது அவசியம். வேகப்பந்து வீச்சே முக்கிய பங்கு வகிக்கும். இதனால் அதில் சிறப்பாக செயல்படுவதே வெற்றியை அடைய உதவும் என்றார்