நியூசிலாந்தில் 20-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன.
மற்றொரு லீக் ஆட்டத்தில் பிரேசில்-ஹங்கேரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 8-வது நிமிடத்தில் ஹங்கேரி அணி முதல் கோலை பதிவு செய்தது. நீண்ட தூரத்தில் இருந்து கோலை நோக்கி வந்த பந்தை பிரேசில் பின்கள வீரர்கள் தடுக்க தவறியதை சரியாக பயன்படுத்தி கொண்ட ஹங்கேரி வீரர் பென்ஸ் மெர்வோ அதிரடியாக அடித்து கோலாக்கினார். 50-வது நிமிடத்தில் கிடைத்த ‘கார்னர்’ வாய்ப்பை பயன்படுத்தி பிரேசில் அணி கேப்டன் டானிலோ தலையால் முட்டி கோல் அடித்து சமநிலையை உருவாக்கினார்.
அதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க கடும் முயற்சிகள் எடுத்தாலும் அதனை பின்கள வீரர்கள் நேர்த்தியான தடுப்பாட்டத்தால் முறியடித்தனர். 86-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பிரேசில் அணி வீரர் பெரீரா கோல் அடித்தார். இதற்கு பதில் கோல் திருப்ப ஹங்கேரி அணி எடுத்த முயற்சிகளுக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி 2-வது வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறியது. ஹங்கேரி சந்தித்த முதல் தோல்வி இது.
‘எப்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பிஜி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹோண்டுராஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்து முதல் வெற்றியை சுவைத்தது. முதல் லீக் ஆட்டத்தில் 1-8 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டு இருந்த பிஜி அணி இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. பிஜி அணி 3 கோல்களையும் முதல் பாதியில் போட்டது. கடைசி வரை போராடியும் ஹோண்டுராஸ் அணியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. ஹோண்டுராஸ் அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். பிஜி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 7-ந் தேதி உஸ்பெகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இன்னொரு லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அணி, உஸ்பெகிஸ்தானை சந்தித்தது. முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த ஜெர்மனி அணி, பின் பாதி ஆட்டத்திலும் 2 கோல்கள் அடித்தது. முடிவில் ஜெர்மனி அணி 3-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை சாய்த்து தொடர்ந்து 2-வது வெற்றியை கண்டதுடன், அடித்த சுற்றுக்குள்ளும் அடியெடுத்து வைத்தது. உஸ்பெகிஸ்தான் அணி தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்தது.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஆட்டங்களில் மியான்மர்-நியூசிலாந்து, உக்ரைன்-அமெரிக்கா (ஏ பிரிவு), ஆஸ்திரியா-அர்ஜென்டினா, பனாமா-கானா (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன.