உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வருகிற அக்டோபர் 5-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது. 65 நாட்டைச் சேர்ந்த 250 வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் இதுவரை 30 பேர் தாங்கள் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தியுள்ளனர். இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு பெயர் பதிவு செய்ய செப்டம்பர் 5-ந்தேதி கடைசி நாளாகும்.
இப்போட்டியை மகாராஷ்டிர மாநில செஸ் சங்கம் மற்றும் புனே செஸ் சங்கம் ஆகியவை நடத்துகிறது. இப்போட்டிகள் விமன் நகரில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் நடைபெறும். மும்பையில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது போட்டி குறித்து செஸ் சங்க அதிகாரிகள் அறிவித்தனர். உலக ஜூனியர் சாம்பியன் செஸ் போட்டியின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியாவின் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உடனிருந்தார்.
மேலும், ”உலக ஜூனியர் சாம்பியன் செஸ் போட்டி இளம்வீரர்களுக்கு நல்ல அடித்தளமாக அமையும். அவர்களுக்கு இப்போட்டி கடும் சவாலாக இருக்கும்” என்று ஆனந்த் கூறினார்.