எமக்காக போராடியவர்களின் நிலையை எப்படி மாற்றுவது?

அண்மையில் முன்னாள் போராளி ஒருவர் சிறுநீரக நோயினால் சாவடைந்துள்ளார். 37 வயதான முருகேசு யசோதரன் என்ற முன்னாள் போராளியே இவ்வாறு சாவடைந்தவர். இது புதிய மரணமல்ல.

2009இற்குப் பின்னர் பல முன்னாள் போராளிகள் இவ்வாறு மரணமடைந்துள்ளனர். மர்மமாகவும் சுகவீனப்படுத்த முயடிாத வியாதிகளினாலும் இவர்களின் மரணங்கள் நிகழ்ந்துள்ளது. முன்னாள் அரசியல் துறை மகளீர் பொறுப்பாளர் தமிழினி புற்றுநோயினால் மரணமடைந்திருந்தார். அவரைப்போலவே பலரும் மரணமுற்றுள்ளனர்.

தமது உடலில் தம்மை அழிக்கும் விச ஊசிகள் ஏற்ப்பட்டுள்ளதாக முன்னாள் போராளிகள் பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தனர். தமது உடலில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதாகவும் தமது வாழ்வை இது அச்சுறுத்துவதாகவும் கூறியிருந்தனர்.

இதேவேளை முன்னாள் போராளிகளின் உடலை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அண்மையில் பிச்சை எடுக்கும் முன்னாள் போராளி என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அப் போராளியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தன.

இதனைக் கண்ணுற்ற புலம்பெயர்ந்த உறவுகள் அவருக்கு முச்சக்கரவண்டி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளனர். இதனால் அந்த முன்னாள் போராளியின் வாழ்வில் விடியல் ஏற்பட்டுள்ளது. அவர் தனது முயற்சியினால் இனி தன் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள இயலும். இந்திய நடிகர்களை அழைத்து நிகழ்வுகளை நடத்தும் நம்மவர்கள், நமக்காக போராடிய போராளிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது எத்தகை வேதனை தரும் செயலாகும்.

முன்னாள் போராளிகள் இறந்தவுடன் அதற்கு கண்ணீர் அஞ்சலி எழுதுவதைவிட முன்னாள் போராளிகளை பாதுகாப்பதே முக்கியமானது. அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி எழுதவும் இரங்கல் உரை ஆற்றவும் செய்கிறோமே தவிர, அவர்களைப் பாதுகாக்க முனையவில்லை. இதனால்தான் முன்னாள் போராளிகளை இழந்து கொண்டிருக்கிறோம்.

தெருவில் பிச்சை எடுக்க முற்பட்ட முன்னாள் போராளிகளை அடையாளம் கண்டோம். ஆனால் எம் கண்ணுக்குத் தெரியாமல் எத்தனை முன்னாள் போராளிகள் துன்ப வாழ்வை சுமக்கிறார்கள். தமது இளமையை இழந்து, தமது கல்வியை இழந்து, தேச விடுதலையை சுமந்து, மக்களின் சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்த போராளிகளுக்கு எங்கள் சமூகம் உரிய இடத்தை கொடுக்கிவில்லை.

இன்றைக்கு பல்வேறு காரணங்கள் பொருட்டு முன்னாள் போராளிகள் நெருக்கடிகளை அனுபவிக்கிறார்கள். முதலில் அவர்களின் உளவியல் பிரச்சினைகளை ஆராயவும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் உரிய அமைப்பை, கட்டமைப்பை வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் உருவாக்க வேண்டும்.

முப்பதாண்டு கால போராட்டத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு, அதன் பொருட்டு உடல், உள வாதைகளுக்கு உள்ளானவர்களுக்கு உரிய இடத்தை வடக்கு கிழக்கு அரசுகள் வழங்க வேண்டும். முன்னாள் போராளிகளுக்கு உரிய மதிப்பை, உரிய இடத்தை நாம் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செய்யும் தகுதியை இழந்துவிடுவோம்.

ஆசிரியர்,
செண்பகம்.
06.04.2017

தமிழினிமுன்னாள் போராளிகள்
Comments (0)
Add Comment