நோய் காரணமாக யாழ்.போதனா மருத்துவமனையில் சாவடைந்த தமிழீழ எழுச்சிப் பாடகர் மாமனிதர் எஸ்.ஜீ.சாந்தன் அவர்களது இறுதி வணக்க அஞ்சலி நிகழ்வுகள் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசசபை வளாகத்தில் (28) மிகவும் உணர்வெழுச்சியாக நடைபெற்றன. இந்நிகழ்வில் அஞ்சலி செலுத்த வந்த பெருமளவான மக்கள் அலையெனத் திரண்டிருந்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக் கிளையின் ஏற்பாட்டில் மாமனிதர் சாந்தன் அவர்களது இல்லத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் அவரது புனித உடல் ஏ-9 வீதி வழியாக பான்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதைகளுடன் எடுத்து வரப்பட்டு கரைச்சிப் பிரதேசசபை வளாகத்தில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலிக்கூட்டம் இடம்பெற்றது.
பெருமளவான தமிழின உணர்வாளர்களான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், கல்விச்சமூகத்தினர் என பலரும் வடக்குக்கிழக்கு, மலையகம், கொழும்பு என நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருமளவில் கலந்துகொண்டு இரங்கல் உரைகளையும் மலர் வணக்க அஞ்சலிகளையும் நிகழ்த்தியிருந்தனர்.
இறுதி அஞ்சலி நிகழ்வின் போது தமிழீழ எழுச்சிப் பாடகர் மாமனிதர் சாந்தன் அவர்களால் பாடப்பட்ட எழுச்சிப் பாடல்களும் சாந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு கலைஞர்களால் பாடப்பட்ட பாடல்களும் இசைக்கப்பட்டன. அதன்போது அங்கு கூடியிருந்தவர்களது விழிகள் கண்ணீர் சொரிந்து அஞ்சலித்ததை அவதானிக்க முடிந்தது.
இவ் அஞ்சலி நிகழ்வில் வடக்குக்கிழக்கு, மலையகம் உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், வேதுகுமார், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபைகளின் உறுப்பினர்கள் கலைஞர்கள், பெருமளவான மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது இறுதி வணக்க அஞ்சலிகளைச் செய்திருந்தார்கள்.