லா லிகா கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது. ஸ்பானிஷ் லீக் தொடரில், “கிளாசிக்’ மோதல் என்று அழைக்கப்படும் ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே, பிரேசிலைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் நெய்மர், ரியல் மாட்ரிட் பின்கள வீரர்களை ஏமாற்றி அழகாக கோல் அடித்தார். ஆனால்,ஜெரார்டு பீக்கே எதிரணி வீரர்களுடன் மோதலில் ஈடுபட ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி கிக் கிடைத்தது. இதை எந்தத் தவறும் செய்யாமல் கோலாக மாற்றினார் ரியல் மாட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இதனால் முதல் பாதி 1-1 என சமநிலை அடைந்தது.
பிற்பாதியில், டோனி க்ரூஸ் கார்னரில் இருந்து அடித்த பந்தை ரியல் மாட்ரிட் அணியின் பின்கள வீரர் பெபே தலையால் முட்டி கோல் அடித்தார். அடுத்த சிறிது நிமிடத்தில், ரியல் மாட்ரிட்டின் ரொனால்டோ, கரீம் பென்ஸிமா, ஜேம்ஸ் ராட்ரிகஸ் ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் துல்லியமாக பாஸ் செய்தனர். இதன் விளைவு, கரீம் பென்ஸிமா தனது பங்குக்கு ஒரு கோல் அடித்தார். அந்த நிமிடத்தில் இருந்து பார்சிலோனா வீரர்கள் சோர்வடையத் தொடங்கினர்.
ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் இருந்தபோது, பார்சிலோனா அணியின் நடுகள வீரர் ஆண்ட்ரூ இனீஸ்டா காயம் காரணமாக வெளியேறினார். நான்கு மாத தடைக்குப் பின் களம் புகுந்த லூயிஸ் செüரஸýம், பெஞ்சுக்குத் திரும்பினார்.
பார்சிலோனா அணியின் நம்பிக்கை வீரர் மெஸ்ஸி, கடைசி வரை கோல் அடிக்கவில்லை. முடிவில் ரியல் மாட்ரிட் வெற்றி வாகை சூடியது.