கோல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானம் இந்திய வீரர் ரோஹித் சர்மாவுக்கு ராசியானதாக அமைந்துள்ளது.
ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை அணித்தலைவர் ரோஹித் சர்மா, 65 பந்தில் 98 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 3000 ஓட்டங்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை நேற்று ரோஹித் சர்மா (113 போட்டி, 3001 ஓட்டங்கள்) பெற்றார்.
இவர் இந்த மைதானத்தில் கடைசியாக விளையாடிய இரண்டு இன்னிங்சில் 238 பந்துகளில் 362 ஓட்டங்கள் குவித்துள்ளார். அதாவது, கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 173 பந்தில் 264 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.
மேலும், ஈடனில் மட்டும் அனைத்து விதமான போட்டிகளில் சேர்த்து 4 சதம், ஒரு அரைசதம் உட்பட ஒட்டுமொத்தமாக 919 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 102.1 ஆகும்.