ஐ நா நோக்கி பிரித்தானியாவிலிருந்து நேற்று புதன்கிழமை ஆரம்பமான விடுதலைச்சுடர் போராட்டம் இன்று பெப்ரவரி 5ஆம் நாள் வியாழக்கிழமை 2ஆவது நாளாகத் தொடர்கிறது.
தமிழீழ மக்கள் கறுப்பு நாளாகக் கடைப்பிடிக்கும் சிறீலங்காவின் விடுதலை நாளாகிய பெப்ரவரி 4ஆம் நாள், (நேற்று) மாலை 4 மணியளவில் ஆரம்பமாகி பின்னர் மாலை 6 மணி 30 நிமிடமளவில் போராட்டம் நிறைவடைந்த இடமான westminister நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்தே இன்று 2ஆவது நாள் போராட்டம் ஆரம்பமானது.
தமிழீழம் ஒன்றே தமிழருக்கான ஒரே தீர்வென உறுதியோடு பயணிக்கும் தமிழ் மக்களால் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சிறீலங்கா இனப்படுகொலை அரசை உலகநீதியின் முன்னிறுத்தவும் தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை அங்கீகரித்தல், தமிழ் மக்கள் தமது அரசியல் பெருவிருப்புகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் தாயகமாகிய புலத்திலும் (தமிழீழத்திலும்) தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் புகலிட நாடுகளிலும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படல் உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் இவ்விடுதலைச்சுடர் போராட்டமானது இன்று காலை 10 மணி 10 நிமிடமளவில் ஆரம்பமானது.
வடமேற்கு லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு கோபிநாத் நித்தியானந்தம் அவர்கள் விடுதலைச்சுடரினையும் அதே பகுதி செயற்பாட்டாளர் திரு நவரட்ணசிங்கம் கந்தையா (சின்னராசு) அவர்கள் தமிழீழத் தேசியக்கொடியையும் ஏந்தியவாறு செல்ல, தமிழ் மக்கள் Victoria, Hyde Park, Paddington ஆகிய பகுதிகள் உட்பட லண்டன் நகரப்பகுதிகளில் போராட்டத்தை முன்னெடுத்தனர். இக்காலை நேர சுடர் பயணம் Westbourne Park இல் பிற்பகல் 2 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதன்போது Conservative கட்சியைச் சேர்ந்த Ms Lindsey Hall, Labour கட்சியைச் சேர்ந்த Westminister வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் Ms Karen Buck ஆகியோரின் செயலகங்களில் மனுக்களும் கையளிக்கப்பட்டன. இப்போராட்டத்தின் நோக்கத்தினை விளக்கிய துண்டுப் பிரசுரங்களும் மக்களிடம் கொடுக்கப்பட்டன.
பிற்பகல் 2.45 அளவில் மீண்டும் ஆரம்பமான இன்றைய விடுதலைச்சுடர் போராட்டம் South Kensington, Chelsea ஆகிய பகுதிகள் உட்பட பல இடங்கள் ஊடாகச் சென்று Fulham என்னும் இடத்தில் மாலை 6 அளவில் நிறைவு பெற்றது. கடுங்குளிரில் இப்போராட்டத்தை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுடன் அவ்வப்பகுதி மக்களும் இணைந்து கொண்டனர்.