வெள்ளைக்கொடி விவகாரம் என்றும். போர்க்குற்றம் என்றும். நான்காம் கட்டஈழப்போர் 2009 இல் இறுதிக்கட்டத்தை அடைந்து ஆயுத மௌனிப்பிற்கு பின்னர்.அன்றிலிருந்து இன்றுவரை இது குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணமே உள்ளன.
குறித்த செய்தி சர்வதேச மட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததற்கான காரணம்அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதனாலேயே.அதே சமநேரத்தில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள், போராளிகள் கொல்லப்பட்ட செய்தியும் வெளிவந்ததால் தமிழ் ஊடகங்கள் மத்தியில் சூடுபிடிக்க தொடங்கியது.
காரணம் வன்னியில் நடைபெற்ற யுத்தம் ஐ.நா போர் விதிகளுக்கு முரணாது, என்பதோடு மனிதாபிமானத்துக்கு முற்றிலும் எதிரானதாகவே மனித உரிமை பற்றி பேசும் சர்வதேச அமைப்புகளால் கருதப்பட்டு, உலகின் கவனத்தை வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின் பால் இழுத்தது.
இது உலகத்தின் பொதுவான பார்வைக்கும், மனித நேயத்திற்கு முற்றிலும் சரியானதே. அதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் இல்லை.
அப்படியே இருந்துவிட்டு போகட்டும் யுத்த விதி மீறலையும், மனிதநேயத்தையும் ஒருபக்கத்தில் வைத்துவிட்டு உலகில் எங்குமில்லாத போராட்ட கொள்கையோடு தனித்தன்மையுடன் சிறந்து விளங்கிய விடுதலைப்புலிகளின் அடிப்படை போர் விதியோடு மட்டுமே ஒப்பிட்டு இந்த கட்டுரையை எழுதுகிறேன் என்பதை முன்கூட்டியே சொல்லிக்கொள்கிறேன்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்கள், பொறுப்பாளர் தொடக்கம் கட்டாய ஆட்சேர்பில் இணைக்கப்பட்டோர் வரை, பன்னிரெண்டாயிரத்திற்கும் அதிகமான போராளிகள், இராணுவத்திடம் சரணடைந்தும், பிடிபட்டுமுள்ளார்கள்.
இதில் கட்டாய ஆட்சேர்ப்பில் இனைக்கப்பட்ட சண்டை பயிற்ச்சி பெறாத, சண்டை அனுபவம் இல்லாத புதிய போராளிகள் இராணுவத்திடம் சரணடைவதென்பது தவிர்க்க முடியாததும், ஏற்றுக்கொள்ள கூடியதுமானதே.
ஆனால் இராணுவத்திடம் சரணடைந்த மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி எழுதியதாக வெளிவந்த “ஒரு கூர்வாளின் நிழலில்” என்ற புத்தகத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டால்,
தமிழினி அப்புத்தகத்தை ஒரு சிலராரின் தூண்டுதலின் பேரில் எழுதி இருக்கவேண்டும் அல்லது தமிழினி இறந்தபின் அவர் எழுதியதை யாராவது மெருகூட்டி இருக்கவேண்டும்.
அல்லது விடுதலைப்புலி என்ற மாபெரும் இயக்கத்தின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தும் அந்த இயக்கத்தின் அடிப்படை கொள்கையான எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதில் இருந்து தான் விலகியதை நியாயப்படுத்துவதற்காக போராட்டத்தை பிழையாக விமர்சித்திருக்க வேண்டும்.
குறிப்பிட்ட மூன்று விடயத்தில் ஏதாவதொன்று நிச்சயமாக நடந்திருக்கவேண்டும். இவை ஒன்றுமே நடந்திருக்க வேண்டாமேயானால், இராணுவத்திடம் சரணடையாமலோ அல்லது பிடிபடாமலோ இருந்திருக்க வேண்டும்.
அதையும் தாண்டி சூழ்நிலையின் நிமிர்த்தம் இயக்க கொள்கைக்கு முரணான முடிவுகளை எடுத்திருந்தாலும், போராட்டத்தை பிழையாக சித்தரித்து புத்தகம் எழுதாமல் அமைதியாக வாழ்ந்திருந்தால் இறந்த பின்னரும் வரும் விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தமிழினி சார்பில் புத்தகத்தை வெளியிட்டவர்கள், அவரை பிரபலப்படுத்த வெளியிட்டார்களா? அல்லது பிரச்னைக்கு உட்படுத்த வெளியிட்டார்களா? என்பதையும் பார்க்கவேண்டியுள்ளது.
இப்படியான பல கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்ல தமிழினி உயிருடன் இல்லை. இருந்தாலும் அவர் வெளியிட்ட எல்லா கருத்துக்கும் பதில் எழுதுவது தேவையற்ற ஒன்றாகவே நினைக்கிறேன்.
இருப்பினும் ஒரு சிலவற்றுக்கான பதில்கள் கண்டிப்பாக குறிப்பிடவில்லை என்றால் தமிழினியின் புத்தகத்தை வாசித்தவர்கள் போராட்டத்தையும், தலைமைகளையும் பிழையாக விளங்கிக்கொள்வார்கள்.
தமிழினி எழுதியதானா புத்தகத்தில், இறுதியாக புதுக்குடியிருப்பில் பொறுப்பாளர்களுக்கு கூட்டம் வைத்த பொட்டம்மான்,
“ஆவணங்கள் இருந்தால் அனைத்தையும் அழித்துவிடும் படியும், அதிசயமொன்று நடந்தாலே தவிர நாங்கள் வெல்வது சாத்தியமில்லை, என்றும் மக்கள் இராணுவத்திடம் செல்லத்தொடங்கிவிட்டார்கள்.
இறுதியாக போராளிகளும் அவர்களோடு சேர்ந்து செல்லவேண்டி வரும். இதிலே புலி இருந்தால் எழும்பி வா என்று கூப்பிடுவான் அப்போது நான் புலி என எழுந்து போகும் போது சுட்டுக்கொல்லுவான் இதுதான் நடக்கப்போகிறது”
இப்படி அம்மான் சொன்னதாகவும் இதனால் விதுசா கோவப்பட்டு அம்மானை விமர்சித்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்
ஆனால் உண்மையில் இறுதியில் நடந்ததும் அதுதானே. இந்த விடயத்தை பல கோணத்தில் பார்க்கலாம். தான் அப்படி விமர்சிக்கவில்லை என்று சொல்ல விதுசாவும் இல்லை, தான் அப்படி எழுதவில்லை என்று சொல்ல தமிழினியும் இல்லை.
போராட்ட வரலாற்றில் விதுசா சக போராளிகளுக்கும், உலகில் உள்ள அனைத்து தமிழ் பெண்களுக்கும், முன்னணி கதாநாயகியாக இருந்து, எல்லோர் மனதிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார்.
இப்படியாக உயர் நிலையில் இருந்த விதுசா. பொட்டம்மானையே விமர்சித்துள்ளார் என்ற பதிவினால் விதுசாவை தமிழர் இலகுவாக மனதிலிருந்து ஓரங்கட்டும் ஒரு உளவியல் ஆயுதமாகவே தமிழினியின் எழுத்து அமைந்துள்ளது.
அல்லது தமிழினியை பயன் படுத்தியவர்கள். புத்திசாலித்தனமாக தமிழினியை வைத்து விதுசாவையும், விதுசாவைவைத்து தமிழினியையும் ஓரங்கட்ட முயற்ச்சித்திருக்கலாம்.
பொட்டு அம்மான் கடைசி வரை, எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதுக்கு உதாரணத்திற்கு ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.
கிளிநொச்சி இராணுவத்திடம் விழுவதற்கு முன்னதாக. ஐரோப்பாவில் இருந்த போராளி ஒருவருக்கு அம்மான் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில் பல விடயங்களை குறிப்பிட்டு எழுதிய அவர் ஒரு சந்தர்ப்பத்தில் ” நாங்கள் தற்போது பலவீனமாக உள்ளோம் என்பதை உணர்ந்திருந்தும் தொடர்ந்து போராடுகிறோம் வெல்வோம் என்ற நம்பிக்கையில்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இது அவருடைய உறுதியான மன நிலையை வெளிப்படுத்துகிறது அதே வேளை இறுதி நேரத்தில் அம்மான் எடுத்த சரியான முடிவு பற்றியும் ஒன்றை குறிப்பிடுகிறேன்.
கிளிநொச்சி இராணுவத்திடம் விழும் தறுவாயில் இருந்தபோது, விசுவமடுவில் இருந்த I,O என்று அழைக்கப்படும் புலனாய்வுத்துறையின், இரகசிய அலுவலகத்தில் இருந்த எழுத்து வடிவ கோப்புகள் அனைத்தும். எரிப்பதற்கு உத்தரவிட்டு சிறிய தடயம் கூட மிஞ்சாதபடி உறுதி செய்ய, குழு ஒன்றையும் நியமித்திருந்தார்.
பின்னர் இராணுவத்தினர், முரசுமோட்டை நோக்கி நகர ஆரம்பித்ததும் இறுவெட்டில் சேமிக்கப்பட்ட இரகசியங்களையும் எரிக்க உத்தரவிட்டு உறுதிசெய்ய குழுவையும் நியமித்தார்.
இறுதியாக இராணுவம் தர்மபுரம் நோக்கி நகரத்தொடங்கையில். வன்தகட்டில் (hard disk) சேமிக்கப்பட்ட இரகசியங்களையும் எரித்து, அழித்து அதன் எச்சங்களையும் கடலில் கரைக்க உத்தரவிட்டு, அதனை உறுதிசெய்யவும் குழு ஒன்றை ஏற்பாடு செய்தார்.
இப்படியாக அம்மான் இறுதி நேரத்தில் கூட மிக இரகசிய வேலைகளில் ஈடுபட்டவர், உதவியவர்கள் போன்றோர் எதிரியிடம் சிக்காதபடி பாதுகாப்பதில் மேலும் அவர் எடுத்த நடவடுக்கைகளை பாதுகாப்பு காரணத்திற்காக இங்கு குறிப்பிடவில்லை.
மேலும் ஒரு கூர் வாளின் நிழலில் புத்தகத்தில் எமது புலனாய்வுத்துறையின் கண்ணுக்குள் மன்னைத்தூவிவிட்டு ஊடகவியலாளர் போல் எமது கட்டுப்பாட்டு போர் தேசத்துக்குள் வந்த இராணுவ புலனாய்வாளர் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
இது ஒரு பெரிய விடயமே இல்லை. காரணம் சமாதான காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஊடக நிறுவனத்தின் அடையாளத்துடன் வன்னிக்கு வருவோரை, உள்ளே வர அனுமதிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
விரிவாக சொல்லவேண்டுமானால் எமக்கு கிடைக்கும் இரகசிய தகவல்களில் ஊடகவியலாளர் போர்வையில் வரும் உளவாளிகள் விபரங்கள்.
அவர்கள் வருகைக்கு முன்னதாகவே கிடைத்துவிடும். அப்படியிருந்தும் அவர்கள் உள்ளே வருவதற்கான அனுமதி கொடுத்து எமது சோதனைச்சாவடியில் இருந்தே சந்தேகம் இல்லாதபடி கண்காணிக்க படுவர்.
அவர்கள் நிகழ்ச்சி நிரல்கள் அவர்களுக்கு தெரியாமலே மாற்றப்படும். அதுமட்டும் இல்லாமல் இயக்கத்தின் இரகசியங்கள் தெரியாத தமிழினி போன்றோரை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
அப்படிப்பார்க்கும் போது தமிழினி சொல்லும் இந்த விடயம் உண்மை. அது நான் சொல்லும் வகையைச்சார்ந்ததாக இருக்கலாம்.
குறித்த இந்த வேலையை செய்வதற்கு அம்மான் தனியான ஒரு நிர்வாகத்தையே வைத்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
இவை எல்லாம் தமிழினி போன்றோரின் அறிவுக்கு எட்டாத மர்மங்கள் சொல்லி புரியவைக்க முடியாதவை. மாபெரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தமிழினி என்பவர் ஒரு சிறு புள்ளியே தவிர புத்தகம் எழுதியதால் புலிகளின் ஒட்டுமொத்த முழு வடிவம் அல்ல.
அன்புடன் உண்மை
2009unmai@gmail.com