முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட, காணாமற்போனோர் குறித்த சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவின் அமர்வில், 46 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். நேற்று முன்தினமும், நேற்றும் நடத்தப்பட்ட இந்த அமர்வில், காலை முதல் மாலை வரை சாட்சியமளிப்பதற்கு 120 முறைப்பாடுகள் தொடர்பாக, 52 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இவர்களில், நேற்று முன்தினம் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட 24 பேருடன், மேலதிகமாக புதிதாக ஒருவரிடமும் சாட்சியம் பெறப்பட்டது. அதேவேளை, நேற்று அழைக்கப்பட்ட 28 பேரில், 21 பேரின் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.
போரின் இறுதிநாட்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற போதும், வெள்ளைவானில் கடத்தப்பட்டும் காணாமற்போனவர்களின் உறவினர்களே சாட்சியமளித்தனர்.
சிலர் விடுதலைப் புலிகளால் கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்ட தமது பிள்ளைகள், படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமற்போனதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, போரின் இறுதிநாட்களில் ஆயிரக்கணக்கான சடலங்களைக் கடந்தே தாம், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் சென்றதாகவும், போரின் போது, உணவுப் பொருள்கள் கிடைக்காமல் பெருமளவான மக்கள் மரணமானதாகவும் நேற்று சாட்சியமளித்த சிலர் கூறியுள்ளனர்.
அதேவேளை, இந்த விசாரணையைக் குழப்பும் வகையில், சாட்சிகளுக்கு இராணுவப் புலனாய்வாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. புதுக்குடியிருப்பில் நடத்தப்பட்ட அமர்வில் போது, நேற்று முன்தினம் 152 பேரும், நேற்று 84 பேரும் காணாமற்போன தமது உறவினர்கள் தொடர்பாக புதிய முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, இதுவரை, காணாமற்போனோர் குறித்த 19 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில், 5000 முறைப்பாடுகள் சிறிலங்கா படையினர் பற்றியவை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.