காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பேன் – சஜித் பிரேமதாச உறுதி

ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்பட்டால் காணாமலாக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீா்க்கமான நடவடிக்கைகளை நிச்சயமாக எடுப்பேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்தோடு, காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகளை தாண்டியும் தனது நடவடிக்கை அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். மாவட்டத்திற்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் செய்த அமைச்சரை சந்தித்து பேச வலிந்து காணாமலாக்கப்பட்ட ஒருவரின் உறவினர் முயற்சித்தார். எனினும் பாதுகாப்பு பிரிவு அவரை தடுத்திருந்தது. இதன்போது அங்கு நின்ற யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டிடம் உரையாடிய குறித்த தாய், தான் யார் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு சஜித் பிரேமதாசவிடம் ஒரு நிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு பெற்றுத்தருமாறு கோரினார்.

அவரின் கோரிக்கைக்கு அமைய சஜித்திடம் பேசுவதற்கு இடமளிக்கப்பட்டது. இதன்போது பிரேமதாசாவை பார்த்து “நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிகின்றோம். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டுமாக இருந்தால் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் உள்ள காணாமலாக்கப்பட்டவர்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவினை தரவேண்டும்” எனதெரிவித்தார்.

இதனை யாழ்.மாநகர முதல்வர் சஜித் பிரேமதாசவிற்கு சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பு செய்திருந்தார். இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, “காணாமல்போனோர் விடயத்தில் நான் கரிசனையுடன் செயற்படுவேன். காணாமல்போனார் அலுவலகம் அதன் செய்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஊடாக நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்தார்.


சஜித் பிரேமதாச
Comments (0)
Add Comment