காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை நினைவுபடுத்தி நகரில் ஊர்வலம்

வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்றுடன் (புதன்கிழமை) 900 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டே குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய இன்று காலை 11.30 மணியளவில் போராட்டம் மேற்கொண்டுவரும் இடத்திலிருந்து கண்டி வீதி வழியாக பேரணியாகச் சென்ற உறவினர்கள், மணிக்கூட்டுக் கோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து கடை வீதி வழியாக மீண்டும் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்தனர்.

இதன்போது ‘தமிழர்கள் 1976இல் சிங்கள அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்தார்கள், 2015இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நம்பிக்கை இழந்தனர். இப்போது தமிழர்களுக்கு அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ளகூடிய புதிய தலைமையே தேவை’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

அத்தோடு, அமெரிக்க மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். மேலும் தமக்கான தீர்வை வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடையாகவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது குற்றம் சுமத்தினர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊர்வலம்
Comments (0)
Add Comment