கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த உறவுகளால் இந்தப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10மணி முதல் பிற்பகல் 12 மணிவரை மேற்கொள்ளப்பட்டது.
லண்டன், டவுனிங்ஸ் வீதியில் ஒன்றிணைந்த புலம்பெயர்ந்த தாயக உறவுகள் வெஸ்ட்மினிஸ்டர் ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். கிளிநொச்சியில் ஜ.நா. அலுவலகம் நோக்கிய வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக எமது குரலையும் உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கச் செய்வோம், கால நீடிப்பு வேண்டாம், சர்வதேச பிரத்தியேக விசாரணை வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.