தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக் குறைந்த ஒருநாள் போட்டிகளில் 50 பேரை ஆட்டமிழக்கச் செய்து புதிய சர்வதேச சாதனை படைத்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 45.1 ஓவர்களில் 230 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது.
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக் 5 கேட்ச் 1 ஸ்டம்பிங் என்று அசத்தினார். இதன் மூலம் 27 போட்டிகளில் 50 பேரை ஆட்டமிழக்கச் செய்து புதிய விக்கெட் கீப்பிங் சாதனை புரிந்தார்.
மேற்கிந்திய தீவுகளின் ரிட்லி ஜேகப்ஸ், இங்கிலாந்தின் ஜெரைண்ட் ஜோன்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் 30 ஒருநாள் போட்டிகளிலேயே 50 பேரை ஆட்டமிழக்கச் செய்த சாதனையை வைத்திருந்தனர்.
தற்போது 27 ஒருநாள் போட்டிகளில் 50 பேரை ஆட்டமிழக்கச் செய்த வகையில் டி காக் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.