மலேசியாவில் குழந்தைகளை குறிவைத்து பாலியல் வர்த்தகம் வளரும் போக்கு உருவாகியுள்ளதாக Tenaganita என்ற மனித உரிமை அமைப்பு அதிர்ச்சிமிகு தகவலை வெளியிட்டுள்ளது. இந்த வரத்தகத்தில் வறுமையான நாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் பல குழந்தைகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரோஹிங்கியா மக்களை போன்ற நாடற்ற மக்களின் குழந்தைகள் ஆட்கடத்தல்காரர்களின் வலையில்எளிதில் சிக்கிக்கொள்வதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
எச்.ஹை.வி., எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்களின் பாதிப்பின்றி குழந்தைகள் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இதுபோன்ற பாலியல் நடவடிக்கைகளை தூண்டுகின்றது. கன்னித்தன்மை உடையவர்களிடம் உறவுக்கொண்டால் தங்கள் பாலியல் ஆரோக்யம் மேம்படும் என பல ஆண்கள் நம்புகின்றனர். அதுமட்டுமின்றி, ஆட்கடத்தல் கும்பல்கள் குழந்தைகளை நீண்டகால முதலீடாக நினைப்பதால் அவர்களை பயன்படுத்துகின்றனர்” என்கிறார் அவ்வமைப்பின் இயக்குநர் கோலோரெனி தாஸ்.
சுற்றுலாவுக்காக வரும் வெளிநாட்டினர்களின் பாலியல் தேவைகளை புரிந்துகொண்ட ஆட்கடத்தல்காரர்கள் கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து பெண் குழந்தைகளை அழைத்து வருவதாக கூறுகின்றார் தாஸ். வெளிநாட்டு மாணவர்கள் பலரும் அவ்வாறு கடத்திவரப்படுவதாகக் கூறுகிறார்.
இந்த வகையில், மலேசியாவின பிரபல சுற்றுலா பகுதியான ‘சாபா’வில் உள்ள ஒரு விடுதியிலிருந்து சில தினங்களுக்கு முன் 18 வயதுக்குட்பட்ட மூன்று பெண்களும் ஓர் ஆணும் காவல்துறையின் தேடுதல் வேட்டையில் மீட்கப்பட்டுள்ளனர். விருந்தினர்களை கவனிக்கும் பொறுப்பிலிருந்த இவர்கள், பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
உலகெங்கும் பில்லியன் டாலர் வர்த்தகமாக உருவெடுத்திருக்கும் பாலியல் வர்த்தகம், பல அப்பாவி மக்களின் சீர் குலைக்கின்றது. இதற்கு பின்புலமாகயிருக்கும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க சர்வதேச அரசுகள் செயல்பட வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.