தமிழ் தலைமைகள் கையாலாகாதவர்களாக இருக்கின்றமையினாலேயே கிழக்கு தமிழ் மக்கள் பௌத்த பிக்குகளை நாடிச் செல்கின்ற சூழல் உருவாகியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனின் அண்மைக்கால போராட்டங்களில் பௌத்த மதகுருமாரின் பிரசன்னம் காணப்படுகின்றமை தொடர்பாக ஆதவன் தொலைக்காட்சியில் நேற்று(திங்கட்கிழமை) ஒளிபரப்பாகிய நிலைவரம் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்த தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தமிழ் தலைமைகள் கையாலாகாதவர்களாவும் வினைத்திறன் அற்றவர்களாகவும் இருக்கின்றமையினால் தமிழ் மக்கள் பௌத்த மதகுருமாரை நாடிச் செல்கின்றனர். அதேபோன்று அரசியல் தலைமைகள் தயக்கம் காட்டுகின்ற தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் பௌத்த மதகுருமார் வலுச்சேர்த்து வருகின்றனர்.
குறிப்பாக மீராவோடை காணிப் பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளில் தமிழ் தலைமைகள் நல்லிணகம் என்று கூறிக்கொண்டு ஓளிந்திருக்கையில் பௌத்த மதகுருமார் தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டனர். ஆகவே, தமிழ் தலைமைகள் சரியாக செயற்பட்டால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை சரியாக அணுகினால் தமிழ் மக்கள் அவர்களை நாடிச் செல்ல வேண்டிய தேவையில்லை” என்று தெரிவித்தார்.