ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் ஒரு வாக்குறுதியை வழங்கி வந்தது. புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவாகவும் அதன் ஊடாக இலங்கையின் நீண்ட காலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதாகவும் குறிப்பிட்டதே அந்த வாக்குறுதி. தமிழ் மக்களும் இதனை நம்ப வைக்கப்பட்டார்கள்.
இதற்காக ஸ்ரீலங்கா அரசு வடகிழக்கில் கருத்தறியும் அமர்வுகளைக்கூட நடத்தியது. அதில் கலந்து கொண்ட தமிழ் ஈழ மக்கள் வடக்கு கிழக்கு ஒரு தாயமாக இணைக்கப்பட்டு தமிழீழ மாநிலமாக அறிவிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மாவீரர்களை நினைவுகூறும் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரினார்கள். சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து தமிழருக்கு சுயாட்சி வழங்குமாறு கோரினார்கள்.
இவை யாவும் இனிதே செவிமடுக்கப்பட்டன. இவை யாவும் இனிதே பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவை யாவும் குப்பை தொட்டியில் வீசப்பட்டுவிட்டன. காலம் காலமாக சிங்கள அரசு தமிழ் மக்களை ஏமாற்றி வருவதைப் போலவே இம்முறையும் நடந்து கொள்கிறதா என்ற சந்தேகம் மிகவும் வலுத்து வருகிறது. தமிழ் மக்களுக்கு தீர்வொன்றை கொடுப்பதைப்போல் புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வருவதைப்போல ஸ்ரீலங்கா அரசு நாடகமாடுகிறது.
சமஷ்டிக்கு இடமில்லை என்றும் வடகிழக்கு இணைக்கப்படாது என்றும் எப்போதோ ஸ்ரீலங்கா அரசு சொல்லி வருகிறது. அதன் நேர்மையைப் பாராட்டலாம். ஆனால் புதிய அரசியலமைப்பு என்ற பெயரை ஸ்ரீலங்கா அரசு உச்சரித்தது. தெற்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் ஆதரவுக்காக புதிய அரசியலமைப்பு கொண்டுவருதலை ஸ்ரீலங்கா அரசு கைவிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதனை நிராகரித்து பழைய அரசியலமைப்பை திருத்தம் செய்யும் யோசனையை முன்வைத்துள்ளது. தனது கட்சி உறுப்பினர்களை பகைத்துக் கொண்டு புதிய அரசியலமைப்பை கொண்டு வர இயலாது என்ற காரணத்தை காட்டிக் கொண்டு புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனையை ஸ்ரீலங்கா ஜனாதிபதி கைவிட இணங்கியுள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்காமல் பழைய அரசியலமைப்பை திருத்துவது என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டது. அது மாத்திரமல்ல ஸ்ரீலங்காவில் நிலவும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைத்தல் என்ற அம்சம் அடங்கிய முதல் பகுதியும் இரண்டாவது பகுதியும் நீக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு இணைப்புமில்லை. சமஷ்டியும் இல்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற சரத்தும் இல்லை. அப்படி என்றால் ஏன் புதிய அரசியலமைப்பு? எதற்காக?
தமிழ் மக்களுக்குச் சிறிய அளவில் சாதமான இருந்த சிறு சிறு பகுதிகள்கூட நீக்கப்பட்டுள்ளன. ஆக சிறிலங்கா பேரினவாத அரசை பாதுகாக்கும் விதமாக காலம் காலமாக ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு எப்படி இருந்ததோ அப்படியே அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா அரசின் புதிய அரசியலமைப்பு சத்திரகிச்சை செய்யப்பட்டு பழைய அரசியலமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. அதுவும் சத்தமின்றி இடம்பெறுகிறது.
நல்லாட்சி நடக்கிறது. தமிழர்களுக்கு இதோ தீர்வு வருகிறது. கனிந்துவிட்டது என்று கூறி சர்வதேச அரங்களில் குற்றவாளியாய் இருக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் தமிழ் தலைமைகள் இந்த விடயத்தில் வாய்மூடி இருப்பது ஏன்? சத்தமின்றி இந்த விவகாரம் மூடிமறைக்கப்படுவது ஏன்?
தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அநீதிகளுக்கு நீதியாகவும் அதனை தடுக்கவும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று உலகத்திற்கு வாக்குறுதி அளித்துவிட்டு ஏற்கனவே உள்ள அரசியலமைப்பை கொண்டு வந்து ஏதோ ஒன்றை கொண்டு வந்துவிட்டோம் என்று கூறி தமிழ் மக்களுக்கு உரிய தீர்வையும் நீதியையும் தர மறுப்பதுதான் சிங்களத்தின் திட்டமா?
அதற்கு தமிழ் தலைமைகள் காவலா?
ஆசிரியர்,
செண்பகம்.
21.03.2016