சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 4வது இடத்தில் நீடிக்கிறது.டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அணிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் துபாயில் நேற்று வெளியிட்டது.
முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்கா (124 புள்ளி), அவுஸ்திரேலியா (123 புள்ளி), பாகிஸ்தான் (103 புள்ளி) அணிகள் உள்ளன. சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த போதிலும், இந்தியா 102 புள்ளிகளுடன் 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
இப்பட்டியலில், இந்திய அணி 3வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. அதற்கு இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்டிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும். அதேபோல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி இழக்க வேண்டும். இதன்மூலம் இந்திய அணி 3வது இடத்துக்கு முன்னேறலாம்.
அதே சமயம் பாகிஸ்தான் அணி, 3வது இடத்தை தக்கவைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் முதலிடத்தை பிடிக்கவும் போராடும். இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.