உலகில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களின் விடயங்களில் எல்லாம் உலகம் தனது நலனை அடிப்படையாகக் கொண்டே அணுகியுள்ளது. அப்படியே ஈழப் பிரச்சினையிலும் அணுகும் நிலமை தோன்றியுள்ளது. சிங்கள அரசுக்கு கால அவகாசம் ஜெனீவாவில் வழங்கும் பிரேரணை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. உண்மையில் ஆளும் சிங்கள அரசு பெருமூச்செடுக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆட்சியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான தடை நீங்கியுள்ளது என்றே சிங்கள அரசு பெருமூச்செடுக்கும்.
2009இல் ஈழத்தில் எம் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டார்கள். 1956இல் இலங்கைத் தீவில் தமிழ் ஈழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. 1983இல் அது இன்னமும் உச்சம் பெற்றது. அதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு எங்கும் திட்டமிட்ட இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. அதன் மிகுவும் கொடூரமான இனப்படுகொலைக் களமாக முள்ளிவாய்க்கால் உருவாக்கப்பட்டது. மிகவும் கொடிய முறைகளில் எங்கள் மக்கள் கொன்று அழிக்கப்பட்டார்கள்.
அதற்கான ஆதாரங்கள் பலவும் உலகின் முன் காண்பிக்கப்பட்டன. சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப் படங்கள், ஏனைய ஆவணப்படங்கள், ஆதார பூர்வமான ஒளிப்படங்கள் என்பன தமிழ் ஈழ மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை உலகிற்கு அம்பலம் செய்தன. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பது நாட்டுக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இலங்கை அரசுக்கும் உலகத்திற்கும் இருந்த உறவு இனப்படுகொலையை போர்க்குற்றம் என்றே அறிவித்தது.
நடந்த இனப்படுகொலைக்கான நீதியை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் போர்க்குற்றத்தை இனப்படுகொலை என ஏற்றுக்கொள்ளச் செய்வதில் தமிழ் ஈழ மக்கள் சக்தியை செலவளிக்க வேண்டியிருந்தது. மகிந்த ராஜபக்சவின் சண்டித்தனம் காரணமாக ஈழப் படுகொலை விவகாரத்தை கையில் எடுத்த உலகம் அதனை மெல்ல மெல்ல வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே ஐ.நா நடத்திய விசாரணையின் அடிப்படையில் போரில் மனித குலத்திற்கு விரோதமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என்ற நம்பிக்கை ஈழ மக்களுக்கு இல்லை. கால அவகசாம் கோரும் இலங்கை அரசு, சர்வதேசத்திற்கு அடிபணிப் போவதில்லை என்றும் போர்க்குற்ற விசாரணையையும் நல்லிணக்கத்தையும் ஒன்றாக்க தேவையில்லை என்றும் கூறுகிறது. அத்துடன் ஒரு புறம் கால அவகாசம் கோரும் இலங்கை நாட்டு ஜனாதிபதி ரஷ்யா சென்று ஆதரவுகளைத் திரட்டி வருகிறார். இலங்கை அரசு கால அவகாசம் கோருவது தன்னை பாதுகாக்கவே.
குறித்த கால அவகாசத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் வலியுறுத்துகிறதாம். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் இந்தப் போக்கே ஈழத் தமிழ் மக்களுக்கு ஆபத்தானது. தன்னை பாதுகாக்கும் சிங்கள அரசு எத்தகைய நீதியை நிலைநாட்டும் என்பது ஈழத் தமிழ் மக்களுக்கும் உலகத்திற்கும் தெரியும். நாம் எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். உலகமே நிகழ்ச்சி நிரலை வடிவமைத்துவிட்டு இருக்கிறது.
இனப்படுகொலையை செய்த சிங்கள அரசு தீயாய் வேலை செய்கிறது. நாமே கால அவகாசத்திற்கு இணங்கிவிட்டு நீதியை குழியில் தோண்டி புதைக்கும் சிங்கள – உலக கூட்டுச் சதிக்குப் பலியாகிக் கிடக்கிறோம். கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் மக்களுக்கு யார் நீதி தருவது? காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன தீர்வு? நீதிக்காக நடைபிணமாய் வாழும் மக்கள் இன்னும் எத்தனை காலம் இப்படி வாழ்வது? வரலாறு முழுவதும் குருதியாலும் கண்ணீராலும் போராடிய நாம் அறிவாலும் போராட வேண்டிய காலம் இது.
சிங்கள அரசிடமிருந்து நீதியைப் பெற்று அதன் ஊடாகவே எங்கள் நிலத்தையும் வாழ்வையும் கட்டமைக்க வேண்டும். அதற்காக ஒன்றுபட்டு சிந்தித்து செயற்படுவோம் தமிழ் ஈழ மக்களே. எங்கள் தேசியத் தலைவரை, எமக்காய் மாண்ட மாவீரர்களை, நாம் கடந்த வீர சரித்திரத்தை நினைத்து எங்களை வலுப்படுத்திக் கொண்டு உலக அரங்கில் நீதியை வென்றெடுப்போம்.
ஆசிரியர்,
செண்பகம்,
24.03.2017