சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக வெளிப்படுத்துவோம்

பெப்ரவரி 4. 1948 ஈழத்தமிழ் மக்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாத கரிநாள். இந்நாள் ஆங்கிலேய அரசினால் தமிழினம்  சிங்களத்திடம் சிறை வைக்கப்பட்டநாள். தமிழர் தேசம் தன் இறைமையைச் சிங்கள தேசத்திடம் முழுமையாக இழந்த கரிநாள். சிங்கள தேசத்தால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புக்கும் தமிழர்களின் வாழ்வியல் சிதைப்புக்கும் கலாச்சாரச் சீரழிவுக்கும் உட்படுத்திப் புதிய முகவரி எழுதத் தொடங்கிய கரிநாள். இலங்கைதீவில் இரு தேசங்கள் என்ற நிலையில், சுதந்திர தமிழீழத்துக்காக போராடி வருகின்ற ஈழத்தமிழர்கள், சிங்கள தேசத்தின் சுதந்திரநாளை கரிநாளாக வெளிப்படுத்தி வருகின்றோம்.

சிங்களம் ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தமிழர் தேச இனவழிப்பை  உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கத் தொடங்கிய நாள். கடந்த 67 ஆண்டுகாலமாக பல லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்களின் இழப்புக்கள்   மாறி மாறி ஆட்சிக்கு வந்த  சிங்கள பேரினவாத  அரசுகளினால் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

தமிழர் தேசத்தை வல்வளைப்புச் செய்த வெற்றிக்களிப்பில் இருக்கும் சிங்கள தேசமானது, தனது சுதந்திரநாளை சிறிலங்காவில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளிலும்  பெருமெடுப்பில் முன்னெடுக்கின்றது.

இக்கரிநாளில் சிங்களத்துடன் கூடிக்களிப்பதை ஈழத்தமிழர்களாகிய நாம் தவிர்த்துக்கொள்வதுடன் இன்றைய நாளில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் முதன்மை ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் தொலைநகல் தொலைபேசி முகநூல் மூலமாகவும்  தமிழின அழிப்பை ஓர்மத்துடன் எடுத்துரைப்போம் .

இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக வெளிப்படுத்துவதோடு,தமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்தும், தமிழீழ தேசத்தின் இருப்பையும், இறமையையும் வலியுறுத்தியும் இலங்கைத்தீவில் சுதந்திரத்துக்காக போராடிவருகின்ற இனமான, ஈழத்தமிழினம் உள்ளதென்பதனையும் சர்வதேசத்தின் செவிகளுக்கு எடுத்துரைத்து தமிழருக்கான ஒரு நிரந்தர நீதி கிடைக்கும் வரை ஓயோமென இக்கரிநாளில் உறுதிகொள்வோம் .

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

அமைப்புஅரசுஅவைஆங்கிலேயஇறைமைஇளையோர்ஈழத்தமிழர்ஈழத்தமிழ்கரிநாள்சிங்களம்சுதந்திரதினம்தமிழினம்தமிழ்பெப்ரவரிமக்கள்மறக்கமுடியாதயேர்மன்வாழ்வு
Comments (0)
Add Comment