வடக்கு கிழக்கு உட்பட பல பிரதேசங்களில் 10,000 இற்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற காணாமல் போனோரின் உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் காணாமல்போனோரின் பெற்றோர்கள் இதே மாவட்டத்தில் இதே இடத்தில் பல போராட்டங்கள் மகஜர், கையளிப்பு என்பவற்றை செய்து எது வித பலனுமற்ற நிலை காணப்பட்டது.தற்போது புதிய அரசாங்கம் வந்துள்ள நிலையில் காணாமல் போனோர் தொடர்பில் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடு இந்த சாத்வீக போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே இந்த அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் காணாமல் செய்யப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களிடம் அவர்களின் விபரங்களை திரட்டி அவர்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள், எந்த சிறைகளில் உள்ளார்கள் என்பது தொடர்பில் தகவலை வெளியிடவேண்டும்.
இந் நிலையில், நாங்கள் அறிகின்றோம் இரகசிய சிறைகளில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக. எனவே அவர்கள் தொடர்பில் தகவல்களை வெளியிட வேண்டும். அவ்வாறு இல்லாமல் காணாமல் செய்யப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தால் இந்த அரசாங்கம் வெளியில் சொல்லவேண்டும். படுகொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களிலுமாக 10000 இற்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் காணாமல் போயுள்ளனர். எனவே இங்கு உள்ள ஒவ்வொரு தாய்மாரும் தங்களது பிள்ளைகளுக்கு விடுதலை வேண்டும் என்பதற்காக அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கூட ஆட்சி மாற்றம் வேண்டி தற்சமயம் ஜனாதிபதியாக இருக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்துள்ளார்கள்.
ஆகவே புதிய அரசாங்கம் இந்த பிரச்சனையை நீடிக்காமல் மிக விரைவாக காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டிய பெரிய பொறுப்பும் காணப்படுகின்றது.
தற்சமயம் வெளிவிவகார அமைச்சராக இருக்க கூடிய மங்கள சமரவீர வெளிநாடுகளில் அகதிகள் என்ற பெயரில் இலங்கையர்கள் இருக்க கூடாது என தெரிவித்துள்ளார். அதேபோல் காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளும் எங்கேயும் இருக்க கூடாது என்பதனை கருத்தில் கொண்டு இவற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றார்.