கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்க நேரம் கேட்டோம். அதனை அவர் நிராகரித்துவிட்டார். பின்னர் நான் விடாப்பிடியாகக் கேட்டதால் ஒரு நிமிடம் ஒதுக்கித்தருவாதாக கூறினர்.
அதன்பிரகாரம் அவசர அவசரமாக ஒரு நிமிடம் சந்தித்தேன். ஆனால் மறுநாள் பிரதமர் வடமராட்சியைச் சுற்றிப்பார்த்தார். பின்னர் சுமந்திரன் வீடு சென்று அங்கு உணவருந்திவிட்டு நுங்கு குடித்தார். சுமந்திரன் வீட்டில் நுங்கு குடிக்க நேரம் இருந்த பிரதமருக்கு மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகக் கதைப்பதற்கு ஒரு மாகாணசபை உறுப்பினருக்கு நேரம் ஒதுக்கித்தர முடியாமல் போய்விட்டது என குற்றஞ்சாட்டியுள்ளார் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம். யாழ் ஊடக அமையத்தில் இன்று (22) ஊடகவியலாளர்களைச் சந்திதபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பிரதமருடன் கதைக்க எனக்கு ஒரு நிமிடம் ஒதுக்கியிந்தாலும் நான் கதைக்கவேண்டியவற்றைக் கதைத்தேன். பலாலி விமான நிலையம் வலி வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட விடையங்களை பிரதமருக்கு தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த சனிக்கிழமை வடமராட்சிக்குச் சென்ற பிரதமர் விடுமுறையைக் களிக்க வந்த சுற்றுலாவாசி போல வந்து சென்றதாத் தெரிவித்துள்ள மக்கள் மக்களின் குறைகள் தொடர்பில் தம்முடன் கதைக்க முன்வரவில்லை எனவும் அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூட ஏற்பாடு செய்து தராமல் பிரதமரை தன்வீட்டிற்கு அழைத்துச் சென்று நுங்கு வெட்டிக் கொடுத்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.