சுவிசில் நடைபெற்ற ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு

ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளில் ஐ.நா முன்றலில் கலந்துகொண்ட சுவிஸ் வாழ் தமிழ் இன உணர்வாளர்கள்!

தன்னினத்தின் துயர் துடைக்க தன்னுடலை தீயில் உருக்கி உலகின் மௌனம் கலைக்கத் துணிந்த ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவுநாளான நேற்று (12.02.2015) 20:00 மணியளவில் மோசமான குளிர் காலநிலையிலும் அவர் ஈகைச்சாவினைத் தழுவிய ஐக்கிய நாடுகள் அவை முன்றலில்; அதே இடத்தில் தமிழ் இன உணர்வாளர்கள் வணக்கம் செலுத்த உறுதியுடன் கலந்து கொண்டனர்.

நினைவு வணக்க ஒன்றுகூடலில் பொதுச்சுடரேற்றலுடன், தமிழ் இன விடுதலைக்காக தங்கள் உயிர்களை ஈகம் செய்த அனைத்து ஈகியர்களையும் நினைவுகூர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்தினைத் தொடர்ந்து மலர்வணக்கம் செலுத்தி உறுதி எடுத்தனர்.

ஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் அனைத்துலக சமூகத்திற்கு தமிழ் இன அழிப்பை தடுத்து நிறுத்தக் கோரி மரண சாசனம் ஒன்றை தனது தியாகத்தின் மூலம் புரிய வைத்து புலம்பெயர் மக்களிடையே குறிப்பாக இளையோர்களிடம் தொடர்ந்து போராடுவதற்குரிய போராட்ட குணத்தையும், இலட்சிய உறுதியையும் விட்டுச் சென்ற ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்கள் 12.02.2009 அன்று தன்னை தீயினில் சங்கமித்து ஈகைச் சாவடைந்தார்.

புலம்பெயர் தமிழர்களின் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தின் விடுதலைச்சுடர் பயணமும், காலத்தின் தேவை கருதி 16.03.2015 திங்கட்கிழமை ஐ.நா சபை முன்றல் முருகதாசன் திடலில் மீண்டுமொரு தடவை எமது அகிம்சைப்போரை எடுத்துரைத்து, தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்க அனைவரும் அணிதிரள்வோம் வாரீர் என சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உரிமையன்போடு இத்தருணத்தில்  வேண்டி நிற்கின்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

ஆண்டுஆறாம்இனம்ஈகைப்பேரொளிஉணர்வாளர்சுவிஸ்தமிழ்துயர்நாள்நினைவுமுருகதாசன்மௌனம்
Comments (0)
Add Comment