சம்பியன்ஸ் லீக் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸூம், கொல்கத்தா நைட் ரைடர்சும் ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச அரங்கத்தில் இன்று மோதுகின்றன.
சம்பியன்ஸ் லீக் தொடரில் இந்தியாவின் முன்னணி ஐ.பி.எல். அணிகளும், அவுஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த சிறந்த உள்ளூர் அணிகளும் கலந்து கொள்வது வழக்கம்.
இதன்படி 6வது சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் இன்று (புதன்கிழமை) தொடங்கி அக்டோபர் 4ம் திகதி வரை நடைபெறுகிறது.
ஏ’ பிரிவு
ஐ.பி.எல். சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா), பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (அவுஸ்திரேலியா), டால்பின்ஸ் (தென்ஆப்பிரிக்கா) மற்றும் தகுதிச்சுற்று அணி ஆகியவை ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன.
‘பி’ பிரிவு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இந்தியா), ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (அவுஸ்திரேலியா), கேப் கோப்ராஸ் (தென்ஆப்பிரிக்கா), பார்படோஸ் டிரைடென்ட்ஸ் (மேற்கிந்திய தீவுகள்) மற்றும் தகுதிச்சுற்று அணியும் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
அதன்படி இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
இரண்டு முறை ஐ.பி.எல். பட்டத்தை வென்றுள்ள கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சம்பியன்ஸ் லீக்கில் இதற்கு முன்பு ஆடிய இரண்டு முறையும் (2011, 2012) லீக் சுற்றை தாண்டியதில்லை.
பலம் பொருந்திய அணியாக காணப்பட்ட கொல்கத்தா அணியில் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல், பன்முக வீரர் ஷகிப் அல்-ஹசன் ஆகியோர் விலகியது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆனாலும் 7வது ஐ.பி.எல்.போட்டியில் 660 ஓட்டங்கள் குவித்த ராபின் உத்தப்பா, சிக்கனமாக பந்து வீசுவதில் சாமர்த்தியசாலியான சுழல் சூறாவளி சுனில் நரைன், அதிரடி மன்னன் யூசுப் பதான் ஆகியோர் அந்த அணிக்கு பலமாக இருக்கிறார்கள்.
அதே சமயம் சென்னை அணி துடுப்பாட்டத்தில் வலுவானது. தொடக்க ஆட்டக்காரர்கள் வெய்ன் சுமித்தும், பிரன்டன் மெக்கல்லமும் அதிரடியில் மிரட்டக்கூடியவர்கள்.
காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ள வெய்ன் பிராவோ, ரெய்னா, அணித்தலைவர் டோனி, டு பிளிஸ்சிஸ் என்று பெரிய மிரட்டல் பட்டாளமே அணிவகுத்து நிற்கிறது.
சென்னை அணிக்கு எப்போதும் வேகப்பந்து வீச்சுதான் பலவீனம். ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக மூன்று முறை 200 ஓட்டங்களுக்கு மேல் விட்டுக்கொடுத்ததே அதற்கு உதாரணம். அவற்றை சரி செய்து விட்டால், கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பு சுலபமாகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பொருந்திய அணியாக இருந்தாலும் ஐ.பி.எல் சம்பியன் என்ற நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கண்டிப்பாக நெருக்கடி கொடுக்கும். அதனால் சென்னை அணித்தலைவர் டோனிக்கு முதல் போட்டியில் சவால் காத்திருக்கிறது.