சொந்த மண்ணில் தங்களை மீளக் குடியமர்த்தாவிட்டால், இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டை கிழித்தெறிவோம் என சம்பூர் அகதிகள் முகாமிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். நேரில் பார்வையிட்டச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடமே சம்பூர் மக்கள் இவ்வாறு கூறியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டைப்பறிச்சான், பட்டித்திடல், மணல்சேனை, கிளிவெட்டி போன்ற அகதிகள் முகாம்களில் 848 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
அம்முகாம்களில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசினால் ஆரம்பத்தில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2012.12.22 ஆம் திகதி முதல் அரசினால் எதுவித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை என சம்பூர் அகதிகள் முகாம்களில் வாழும் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் தெரிவித்தனர். அத்துடன், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வசதி படைத்த உறவினர்களால் ஏழை மக்களின் பசியைப் போக்கக் கொண்டுவரும் உலர் உணவுப்பொருட்களையும் திருப்பி அனுப்புவதாகவும் அதையாவது பெற்றுக்கொள்ள முடியாதநிலை தோன்றியுள்ளதாகவும் அம்முகாமிலுள்ள மக்கள் ஆவேசத்துடன் கூறியுள்ளனர்.
நாம் பிறந்த மண்ணில் சிறப்பாக வாழ முடியும். அகதி என்ற போர்வையில் வாழத் தேவையில்லை. எம்மை எமது பகுதியிலேயே குடியேற்றுங்கள். அப்படி குடியேற்றாவிட்டால் நாம் எதிர் காலத்தில் தேர்தல் வரும்வேளை வாக்குச்சீட்டைக் கிழித்தெறிவோம் எனவும் முகாம் வாழ்வை வெறுத்து வாழ்ந்து வரும் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.