ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 38வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா- குஜராத் அணிகள் மோதின.
இதில் கொல்கத்தாவின் 159 ஓட்டங்கள் இலக்கை எளிதில் எட்டிய குஜராத் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. கடைசியில் தினேஷ் கார்த்திக் (51), ஆரோன் பின்ஞ் (29) ஆகியோர் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 16வது ஓவரில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க பின்ஞ் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். அப்போது 18வது ஓவரில் 15 பந்தில் 1 ஓட்டம் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஜடேஜா, சாவ்லாவின் பந்தை தட்டிவிட்டு ஓட முற்பட்டார். இதனால் மறுமுனையில் இருந்த ஆரோன் பின்ஞ் ஓட்டங்கள் எடுக்க முயன்றபோது ஓட்டமுறையில் ஆட்டமிழந்தார்.
இதனால் ஜடேஜாவின் மீது கோபமடைந்த ஆரோன் பின்ஞ், முனுமுனுத்த படியே வெளியேறினார். வெளியே சென்று தனது ஹெல்மெட்டை தூக்கிப் போட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் அந்த ஓவரின் கடைசி பந்தில் ஜடேஜா ஒரு சிக்சர் விளாசி குஜராத் அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இந்நிலையில் ஆரோன் பின்ஞ் தனது டுவிட்டர் பக்கத்தில் ருசிகரமாக ஒரு டுவிட் போட்டுள்ளார். ஜடேஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவேற்றிய ஆரோன் பின்ஞ், “நாங்கள் மீண்டும் நண்பர்கள் ஆகிவிட்டோம்” என்று ஜாலியாக பதிவு செய்துள்ளார்.