தமிழ் மக்கள் எல்லாவற்றையும் அவ்வளவு எளிதாக மறந்துவிடுகிறார்களா? சில விடயங்களை மறந்துதான் போகிறார்கள். எதனையும் மறக்க முடியாதபடி, மீண்டும் மீண்டும் நம் கண் முன்னால் கொடூரங்கள் அரங்கேறுகின்றனவே? அப்படி இருக்கையில் எதனை மறக்க முடியும்? எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதி முதல் வரும் மாதம் முதலாம் திகதி வரை ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் இடம்பெறவுள்ளது. ஆனால் இதனை எல்லாம் தமிழ் சமூகம் மறந்துபோய் உள்ளதா என்ற மாபெரும் கேள்வி எழுகிறது.
மறுபுறத்தில் ஸ்ரீலங்கா அரசு தன்னை தயார்படுத்தி வருகிறது. குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்ளவும் தன்னை நல்ல அரசாக காட்டவும் பல்வேறு அரசியல்களில் ஈடுபடுகின்றது. உண்மையில் போர் முடிவடைந்து கடந்த ஏழு வருடங்களில் ஸ்ரீலங்கா அரசு என்ன செய்தது? சில துண்டு நிலங்களை விடுவித்து, காணாமல் போனோர் ஆணைக்குழு அமர்வுகளை நடத்தி கண்துடைப்பு நடவடிக்கைகளில் மாத்திரமே ஈடுபட்டது. காணாமல் போனோர் விடயத்தில் ஒரு துளியேனும் நல்ல விடயங்கள் நடந்தனவா? ஸ்ரீலங்கா அரசு வாய்திறந்ததா?
கடந்த செப்டம்பர் மாத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டது. போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை இணைத்து கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குதல், இராணுவமயத்தை நீக்குதல், காணாமல் போனோர் தொடர்பில் கண்டறிதல், ஊடக சுதந்திரத்தை நிலை நிறுத்தல், ஜனநாயகத்தை ஏற்படுத்தல் என பல்வேறு விடயங்கள ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இடம்பெற்றன. அதேவேளை குறித்த தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா அரசு இணை அனுசரனை அளித்தது.
கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஐ.நாவின் தீர்மானங்கள் இறுக்கமாக இருந்ததைப்போல ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏன் இருக்கவில்லை? மகிந்த ராஜபக்சவின் மேற்குலக எதிர்ப்பு ஆட்சியை கவிழ்க்கவும், எதிர்க்கவும் தமிழ் ஈழ மக்களின் விடயத்தை மேற்குலகமும் ஐ.நாவும் கையாண்டது. அவர்களுக்கு தமிழ் ஈழ மக்கள் சந்தித்த இனப்படுகொலை குற்றம் குறித்து உண்மையான அக்கறை இல்லை. அவர்கள் தமது அரசியலுக்காக தமிழ் ஈழ மக்களை பகடை காய்களாக பயன்படுத்துகின்றனர்.
செப்டம்பரில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹைசேன் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டார். அவர் ஸ்ரீலங்கா அரச தலைவர், உள்ளிட்ட தரப்புக்களை சந்தித்ததுடன் வடக்கிற்கும் விஜயம் மேற்கொண்டார். கடந்த மார்ச் மாத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை. ஆனால் முறையின்படி ஜூன் கூட்டத் தொடரிலேயே இந்த விடயம் இடம்பெறுகிறது.
ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பூகோள அரசியல் மாற்றம் ஒன்று ஏற்பட்டிருப்பதை ஒரு குழந்தையும் அறியும். இப்போது சீனாவும், இந்தியாவும், அமெரிக்காவும் போட்டி போட்டுக்கொண்டு ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவு அளிக்கிறது. ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஓடியோடி எல்லா நாடுகளுக்கும் விஜயம் செய்கிறார். நாம் எதிர்கட்சித் தலைமையைப் பெற்று, பதவிகளைப் பெற்று நல்ல உறக்கத்தில் இருக்கிறோம். அவர்கள் எமக்கு எதிராக நடந்த இனப்படுகொலையிலிருந்து தப்ப காய் நகர்த்துகிறார்கள்.
இந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹைசேன் எதிர்வரும் 13ஆம் திகதி தொடங்கும் கூட்டத் தொடரில் முன்வைக்கும் வாய்மொழி மூல அறிக்கை ஸ்ரீலங்கா அரசுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப சில காய் நகர்த்தல்களை ஐ.நாவும் மேற்குலகமும் இணைந்து முன்னெடுத்துள்ளன. இதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கம், நல்லிணத்திற்கான விசேட செயலணி, காணாமல் போனோர் அலுவலகம் என்று சில பெயர்களில் அலுவலங்களை திறந்துள்ளது.
தமிழ் ஈழ மக்களுக்கு எந்த விதத்திலும் துளியேனும் பயன்படாத இந்த அலுவலகங்களைக் காட்டி “ஐ.நா பிரேரணை நன்றாக நடைமுறைப்படுத்தினோம்” என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுவார். அதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹைசேன் ஏற்றுக்கொள்வார். நம்முடைய தலைவர்கள் ‘மிக்சர்’ சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். இதுதான்நடக்கப் போகிறதா? நாம் என்ன செய்கிறோம்?
அன்றைக்கு ரணிலை ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக வராமல் தடுத்தமைக்கான காரணத்தை தமிழ் ஈழ மக்கள் என்றும் உணர்வார்கள். இப்போதும் அதை நன்றாக உணரலாம். ராஜபக்சவின் இனப்படுகொலை யுத்தத்தத்தைக் காட்டிலும் ரணிலின் இன அழிப்பு யுத்தம் பொல்லாததது. அது இனத்தின் வேர்களை அழிக்கும். இன்றைக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளை புலம்பெயர் நாடுகளை முடக்கிவிட்டு தன்னை பாதுகாக்கும் போரை உலக அளவில் மிக மௌனமாக நூதனமாக முன்னெடுக்கிறது.
தமிழ் ஈழச் சமூகம் இனியேனும் விழித்துக்கொள்ள வேண்டும். எமக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு இழைத்த அநீதிகளுக்கு நீதியை கோரும் போராட்டத்தை தொடங்க வேண்டும். விரைவாகவும் பரவலாகவும் வினை திறனாகவும் முன்னெடுக்க வேண்டும். ஸ்ரீலங்கா அரசு தன்மீது படிந்த இனப்படுகொலை கறையை மெல்ல மெல்ல உலகின் உதவி கொண்டு கழுவுகிறது. குற்றம் குழுவும் போரில் ஸ்ரீலங்கா அரசு வென்றால் அது தமிழ் ஈழ மக்களின் அடுத்த கட்ட, பேரழிவுக்கும் வீழச்சிக்கும் அடிப்படையாக அமையும் என்பதை இப் பார்வை எச்சரிக்கிறது.
ஆசிரியர்,
செண்பகம்.
06.06.2016