ஜெயலலிதா எப்போது முதல்–அமைச்சர் நாற்காலியில் அமர்வார்

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, இனி அரசியல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு, மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இதனால் ஜெயலலிதா மீண்டும் எப்போது முதல்–அமைச்சர் நாற்காலியில் அமர்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் எழுந்துள்ளது.

நேற்று ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியானதும் உற்சாகத்தில் துள்ளிய அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போயஸ் கார்டனுக்கு படையெடுத்தனர். அ.தி.மு.க.வினர் திரண்டு வரக்கூடும் என்பதை எதிர்பார்த்து அங்கு 300 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களால் உணர்ச்சிப் பிடிப்பாக மாறி இருந்த அ.தி.மு.க. தொண்டர்களை கட்டுப்படுத்த இயலவில்லை.

ஓ.பன்னீர் செல்வம் உள்பட மந்திரிகள், தலைவர்கள் வந்த போது வெள்ளமென திரண்டிருந்த அ.தி.மு.க.வினரை படாதபாடு பட்டுத்தான் கடந்து சென்று ஜெயலலிதா வீட்டுக்குள் செல்ல முடிந்தது. ஆனால் அவர்கள் யாரையும் ஜெயலலிதா சந்திக்கவில்லை. அவர்களிடம் ஜெயலலிதா இண்டர்காமில் பேசியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு மந்திரிகளும் தலைவர்களும் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து புறப்பட்டுச்சென்றனர்.

வழக்கு வெற்றியை கொண்டாடும் வகையில் ஜெயலலிதா வீட்டுக்கு வெளியில் வந்து கை அசைப்பார் என்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போயஸ் தோட்டம் வீடு முன்பு நீண்ட நேரமாக நின்று வாழ்த்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். ஆனால் ஜெயலலிதா வெளியில் வரவில்லை.

‘‘தீர்ப்பு மன நிறைவு தருகிறது’’ என்று அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, நேற்று அஷ்டமி என்பதால் அடுத்தக்கட்ட புதிய நடவடிக்கைகளை தொடங்க வில்லை என்று கூறப்படுகிறது.

இரண்டாவது நாளான இன்றும் அ.தி.மு.க. தரப்பில் இருந்து புதிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இன்று நவமி என்பதால் புதிய ஆட்சி தொடர்பான ஆலோசனை நாளைதான் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரையும் சென்னையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘‘அதிருப்தி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களையும் சென்னையில் இருக்கும்படி கூறியுள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும்’’ என்றார்.

அதற்கு முன்னதாக முதல்–மந்திரி பதவியில் இருந்து விலகி ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா கடிதம் கொடுப்பார். அதை கவர்னர் ரோசய்யா உடனடியாக ஏற்றுக்கொள்வார். இதைத் தொடர்ந்து நடைபெறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முறைப்படி ஜெயலலிதா புதிய தலைவராக தேர்ந்து எடுக்கப்படுவார்.

வருகிற சனிக்கிழமை வரை தேய்பிறை என்பதால், ஜெயலலிதா எப்போது பதவி ஏற்பார் என்பது இன்னும் உறுதியாக வெளியில் தெரியவில்லை. 17–ந்தேதி நிறைந்த அமாவாசை தினமாக இருப்பதால் அன்று அவர் முதல்வர் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் தான் அ.தி.மு.க.வின் 4–வது ஆண்டு வெற்றிநாள் தொடங்குவதால் அன்று பதவி ஏற்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எம்.எல்.ஏ ஆக இல்லாத ஒருவர் முதல்–அமைச்சராக பதவி ஏற்கும் போது, அடுத்த 6 மாத காலத்துக்குள் அவர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.ஆக வேண்டும். அதன்படி பார்த்தால் ஜெயலலிதா இப்போது பதவி ஏற்கும் நிலையில் அடுத்த 6 மாத காலத்துக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.ஆக வேண்டும்.

இந்த நிலையில் ஒரு மாநில அரசு 4 ஆண்டுகளை ஆட்சியில் பூர்த்தி செய்யாமல் இருந்தால் மட்டுமே, இடைத்தேர்தல் நடத்த வற்புறுத்த முடியுமாம். 4 ஆண்டுகளை கடந்து விட்டால் தேர்தல் நடத்த வற்புறுத்த முடியாது. கோரிக்கை மட்டும்தான் வைக்க முடியுமாம்.

தமிழ்நாட்டில் வரும் 23–ந்தேதி அ.தி.மு.க. அரசின் 4 ஆண்டு ஆட்சி நிறைவு பெற உள்ளது. எனவே இன்னும் 11 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால்தான், 6 மாதத்துக்குள் தேர்தலை நடத்த வற்புறுத்த முடியும் என்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் ஜெயலலிதா எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற சூடான விவாதம் தொடங்கியுள்ளது. ஸ்ரீரங்கம், ஆண்டிப்பட்டி, வாசுதேவ நல்லூர் என்று பல தொகுதிகளின் பெயர்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

கடந்த முறை வைணவத்தலம் கொண்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, இந்த தடவை சிவபெருமான் அல்லது முருகன் தலம் உள்ள தொகுதியில் நிற்பார் என்றெல்லாம் பேசப்படுகிறது.

ஆனால் அரசியல் நிபுணர்களும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் வேறு விதமாக நினைக்கிறார்கள். முதல்வர் நாற்காலியில் அமரும் ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு பல முக்கிய திட்டங்களை அறிவிப்பார் என்றும் தொடங்கி வைப்பார் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

மெட்ரோ ரெயில் திட்டம், அம்மா கேண்டீன்கள் மற்றும் புதிய பஸ்கள் வழித்தடங்களை தொடங்கி வைப்பார். அதோடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டையும் நடத்துவார். ஏராளமான திட்டங்களையும் அறிவிப்பார்.

ஜெயலலிதா அறிவிக்க உள்ள திட்டங்கள் தமிழக அரசியலில் மிகப்பெரும் அதிரடியாக இருக்கும் என்று அ.தி.மு.க.வினர் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழக மக்களின் மனம் குளிரும் வகையில் புதிய திட்டங்களும், ஆட்சியும் இருக்கும் என்கிறார்கள்.

இதன் மூலம் மக்கள் மனதில் அ.தி.மு.க. ஆட்சி பற்றி மேலும் நல்ல சுமூகமான மனநிலையை ஏற்படுத்த முடியும் என்கிறார்கள். அத்தகைய சூழ்நிலை உருவானதும் தமிழக சட்டசபையை கலைத்து விட்டு முன் கூட்டியே தேர்தலை ஜெயலலிதா சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

அதாவது எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பதற்கான 6 மாத கால அவகாசம் முடியும் தருவாயில் இந்த முடிவை ஜெயலலிதா எடுக்கக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். ஒரே ஆண்டுக்குள், குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து 2 தடவை தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் முன் கூட்டியே தேர்தல் நடத்தும் முடிவை ஜெயலலிதா எடுப்பார் என்கிறார்கள்.

அ.தி.மு.க.வின் ஐந்து ஆண்டு ஆட்சிக் காலம் அடுத்த ஆண்டு (2016) மே மாதம் வரை உள்ளது. எனவே 2016–ல் ஏப்ரல் – மே மாதம்தான் தேர்தலை நடத்த வேண்டும்.

ஆனால் ஜெயலலிதா அடுத்த 6 மாத இறுதியில் சட்டசபையை கலைக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் முன் கூட்டியே தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதன்படி இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முன் கூட்டியே தேர்தல் வரலாம் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இவை அனைத்தும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எடுக்கப்போகும் அடுத்தடுத்த முடிவுகளைப் பொறுத்தே அமையும்.

அதிமுகஅமைச்சர்உற்சாகம்ஏற்ப்புகுவிப்புசொத்துஜெயலலிதாதமிழகம்தொண்டர்கள்நாற்காலிபதவிபன்னீர்ச்செல்வம்முதல்வழக்குவிடுதலை
Comments (0)
Add Comment