ஜெயலலிதா ஜாமீன் நிராகரிப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரியும், அவருக்கு ஜாமின் வழங்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது இன்று விசாரணை நடைபெற்றது.

இதேபோல, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களின் மீதும் காலை 11 மணி முதல் விசாரணை நடைபெற்றது. உணவு இடைவேளைக்கு பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்ற விசாரணையின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங், ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுவிட்டதாக தகவல் பரவியது. செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டதை தொடர்ந்து, தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளியிடப்பட்டதால், ஆளுங்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆனால், நிபந்தனை ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி சந்திரசேகரா, ஜாமின் மனுக்களை நிராகரிப்பதாக கூறி, வரும் 27-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். இந்த தகவலால் அதிமுகவினர் குழப்பமடைந்தனர். சிறிது நேரம் நீடித்த கொண்டாட்டத்திற்கு பின்னர் சோகமடைந்தனர்.

முன்னதாக, இன்று காலையில் நடைபெற்ற வாதத்தின்போது, ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து, வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி எடுத்துரைத்தார். பல்வேறு வழக்குகளில் ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவுகளை சுட்டிக்காட்டி, ஜெயலலிதாவுக்கும் ஜாமின் வழங்க வேண்டும் என்று ஜெத்மலானி வாதாடினார்.

இளவரசிஉயர் நீதிமன்றம்கர்நாடகாசசிகலாசுதாகர்சொத்துக்குவிப்புஜாமீன்ஜெயலலிதாதீர்ப்புமனுமறுப்புராம் ஜெத்மலானிவழக்குவிசாரணை
Comments (0)
Add Comment