டக்ளஸ் பாணியிலே பதிலடி கொடுத்த சிறீதரன்

மு.அ. டக்ளஸ் தேவானந்தா என்றால் முதுகெலும்பில்லாத அமைச்சர் என்று நான் சொல்ல வரவில்லை என்று டக்ளஸ் தேவானந்தாவின் பாணியிலேயே அவருக்குப் பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். கிளிநொச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மு.விக்னேஸ்வரன் என்று விளித்திருந்தார். அத்துடன் மு.விக்னேஸ்வரன் என்றால் முட்டாள் விக்னேஸ்வரன் என்று அர்த்தமல்ல முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்பதே என்றும் நக்கலாக வியாக்கியானம் செய்திருந்தார்.

வடக்கு மாகாண சபையை சரியான ஆட்சி அதிகாரம் கொண்ட சபையாக நாம் கருதவில்லை. எனினும் மக்களின் ஆணையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சபையில் ஆட்சி அமைத்திருக்கின்றது. ஆனால் இங்கு தமிழர்களின் ஆட்சியை விரும்பாதவர்கள் விமர்சிக்கின்றனர். குறிப்பாக வடக்குக்கு வந்த ஜனாதிபதியும் விமர்சித்தார். இதன்போது கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களையும் செய்தார். இதேபோன்று மு.அ. டக்ளஸ் தேவானந்தாவும் விமர்சித்திருக்கிறார். மு.அ.டக்ளஸ் தேவானந்தா என்று நான் கூறியமை முதுகெலும்பில்லாத அமைச்சர் என்று நான் சொல்ல வரவில்லை. முக்கிய அமைச்சர் என்றே கூறினேன்.

இப்படிப்பட்ட அமைச்சர்கள் தமிழர்களின் உரிமைகளை மறுத்துத்தான் கதைப்பார்கள் இவர்களால் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமா. இவர்களும் முன்னர் தமிழீழத்தையே கேட்டனர் பின்னர் ‘மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி’ என்றனர். இப்போது அதுவும் இல்லை. இந்நிலையில் இன்று அரசிடம் எதுவும் கேட்க முடியாமல் அரசு கொடுப்பதையும் கூறுவதையுமே வாங்கும், கேட்கும் நிலையில் இருக்கின்றனர். எமது மக்களால் நிராகரிக்கப்பட்ட இத்தகைய அமைச்சர்களின் குழுக்களை வைத்துக் கொண்டு எங்களை நசுக்குவதற்கு அரசு திட்டம் தீட்டிச் செயற்படுகின்றது.”- என்றார்.

அமைச்சர்கிளிநொச்சிசி. சிறீதரன்சிறீதரன் டக்ளஸ்தேவானந்தாஜனாதிபதிதமிழ் தேசிய கூட்டமைப்புநிகழ்வுபதிலடிமஹிந்த ராஜபக்சவிக்னேஸ்வரன்
Comments (0)
Add Comment