டெசோவும் கருணாநிதியின் கபட நாடகமும்!

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், ஈழ ஆதரவாளருமான திரு.கலைமணி அவர்கள்  முன்னாள் இந்தியப்பிரதமர்  இராஜீவ்காந்தியின்கொலையைத் தொடர்ந்து தமிழகத்தில்தடா உட்பட்ட பல்வேறு ஈழத்தமிழர்களின் வழக்குகளில்அவர்கள் சார்பாக வாதாட பெரும்பாலான வழக்கறிஞர்கள் மறுத்த(அ) தயங்கிய நேரத்தில் தாமாக முன் வந்து உணர்வுப் பூர்வமாக வாதாடியவர் என்பதும், இயக்கத்தின் உச்சதலைவர்களின் மதிப்பை பெற்று இருந்தவரும், மாவீரர் கர்னல் கிட்டு அவர்களின் இறுதிநேர களஉரையாடல்களில் பங்கு கொண்டவரும் ஆவார்.

அந்நிகழ்வுகளைப் போல பல செய்திகளை வியப்புக்குரிய வண்ணம் நமக்கு  அளித்திட முன் வந்துள்ளார். அவரின் தொடர்புகள் நமக்கு இதுகாறும் அறியாத செய்திகளை அளிக்கும் என்பது மட்டும் திண்ணம். அவர்2011ம் ஆண்டு “டெசோவும் கருணாநிதியின் கபட நாடகமும்” எனும் தலைப்பில் எழுதியிருந்த நூல் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இறுதி யுத்தத்தில் பெருமளவான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது தனது பதவியை தக்க வைக்க நினைத்த அன்றைய முதல்வர் கருணாநிதி காங்கிரசு  கட்சிக்கு துணை நின்று இனப்படுகொலைக்கு காரணமானது எப்படி என்று அவரது சுயரூபத்தைக் காட்டிஎழுதப்பட்ட நூலினை பகுதிகளாக பிரித்து தொடர் கட்டுரையாக தற்போதைய சூழ்நிலை கருதி மீண்டும்  வெளியிடுவது சிறப்பாக அமையும் என கருதுகிறோம்.

 இனி இங்கு தொடரப்போகும் அவரது பல தொடர் ஆக்கங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை மட்டும் நாம் அறியலாம். அவ்வாறு அறிய இயலாமல் போனால் பல மறைந்துள்ள வரலாற்று உண்மைகள் வெளிவராது போகலாம்.

 இனி….

           “டெசோவும் கருணாநிதியின் கபட நாடகமும்”

             வழக்கறிஞர் கலைமணி (2011 இல் எழுதியதின் ஒரு பகுதி).

   டெசோ புதுப்பிப்பு

அண்மையில் திரு.மு.கருணாநிதி அவர்கள் தலைமையிலுள்ள திமுக தமிழக மக்கள் எதிர் நோக்கியுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிருத்தியே டெசோ (தமிழக ஆதரவாளர் அமைப்பு) என்ற அமைப்பினை விரைவாகவும், பெருஞ்செலவினங்களைச்  செய்தும் ஈழத் தமிழர்களை முன்னிறுத்தி அவர்களுக்கு விடிவைப் பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு மாபெரும் ஆர்ப்பாட்ட்ட அரசியலைச் செய்து வருகிறது.  இவர்கள் செய்த இனத்துரோகங்களை நாம் மறந்தா விட்டோம்? 2-3மணி நேர பட்டினி நாடகத்தினூடே நூறாயிரத்திற்கும் மேலான ஈழத்தமிழ் மக்களை மறைமுகமாகக் கொன்று குவிக்க உதவிய இவர்களுக்கு இவ்வளவு துணிவு எப்படி வந்தது?

டெசோவின் தேக்கத்திற்கு காரணம் யார்?

1985ஆம் ஆண்டு மத்தியில் இதே திரு.மு.கருணாநிதி அவர்கள் தலைமையில் திருவாளர்கள் கி.வீரமணி, பழ.நெடுமாறன் போன்றோர் முன்னிலை வகிக்க ஆரம்பிக்கப்பட்டு அதில் அன்றைய இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களான திருவாளர்கள் வாஜ்பாயி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், என்.தி.ராமாராவ், எச்.என்.பகுகுணா போன்றோரும் மிகச் சிறந்த மனித உரிமை ஆர்வலர்களும் சேர்ந்து இயங்கி வந்த தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்புதான் இந்த டெசோ. பெரும் முன்னெடுப்புகள் செய்யப்பட்டக் காரணத்தால் தமிழகத்தில் ஈழப்பிரச்சனை மக்களிடம் சென்று ஒரு பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் துவங்கிய அதே வேகத்தில் அந்த டெசோ இயக்கம் நலிந்திடவும், மறைந்திடவும் இதே திரு.மு.கருணாநிதி அவர்கள் காரணமானார். இராசீவ் காந்தியின் காங்கிசுடன் தேர்தல் கூட்டு சேர்வதற்காக அப்போது இல்லாத பல காரணங்களைக்கூறி அந்த அமைப்பினை செயல்படாமல் செய்தார்.

விடுதலைப்புலிகள் பலமடைந்து வந்த காரணமே ஈழமக்களின் விடிவுக்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பினைத் திட்டமிட்டு திரு.மு.கருணாநிதி அவர்கள் இயங்கவிடாது செய்ய முதன்மையாயிற்று. திருவாளர்கள் கி.வீரமணி, பழ.நெடுமாறன் போன்றோர் அதன்பின்பும் தொடர்ந்து  இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களான திரு.ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோருடன், மனித உரிமை ஆர்வலர்கள்சேர பயணித்தார்கள் என்பது வேறு கதை. ஆனால் அன்றைய டெசோவின் பயணம் அதன் பழைய வீரியத்தோடு பின்னர் தொடரவேயில்லை. அதன் பின் காலமாற்றத்தால் இன்றைய இளையசமூகம் இந்தஉண்மைகளை அறிய வாய்ப்பின்றி போய்விட்டது.

விடுதலைப்போராளிகள் கையளிப்பு !

     

1982ஆம் ஆண்டு டெலோ இயக்கத் தலைவர்களான ஜகன், குட்டிமணி ஆகியோர் இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை அளிக்கப்பட்ட நேரத்தில் மாண்புமிகு எம்.ஜி.ஆர் அவர்கள் அப்பிரச்சனையை சட்டமன்ற தீர்மானம் மூலம் இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் தண்டனையை இரத்து செய்ய இலங்கை அரசினைக் கேட்டுக்கொள்ள வேண்டினார். அதுவன்றியும் தமிழகத்தில் பிடிபட்டிருந்த எந்த இலங்கைத் தமிழரையும் அவரது ஆட்சியில் நாடு கடத்த அவர் சம்மதிக்கவேயில்லை.ஆனால் 1973ஆம் ஆண்டு குட்டிமணி தமிழகக் காவல்துறையால் பிடிபட்டபோது அவரை இலங்கை அரசு இந்திய மத்திய அரசு மூலம் விடுத்த வேண்டுகோளின்படி அவர்களிடம் ஒப்படைத்த பெருமை இன்றைய டெசோ நாயகன் கருணாநிதியையே சாரும்.

ஈழத்தில் தோன்றிய பல போராளிக் குழுக்களில் அதே 80களின் இறுதியில்தங்களின் தனித்தன்மையைநிலைநாட்டிக்கொள்ள ஒன்றுக்கொன்று தங்களுக்குள் நடத்திக்கொண்ட சண்டைகளில் இந்திய, இலங்கை அரசுகளின் உளவுத்துறைகளும், அரசியல்  கட்சிகளும்  உட்புகுந்து  அவர்களைச் சிதறச்செய்த வரலாறுகள் மிக நெடியவை. அவற்றின் மூலத்தை நாம் இப்போது அலசி ஆராயத் தேவையில்லை. ஆனாலும் அவற்றில் எஞ்சிய போராளிக் குழுவான விடுதலைப்புலிகள் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு, வலிமையானதொரு படையணியுடன் தலை நிமிர்ந்து தமிழீழத்தை சிங்களர்களிடமிருந்து ஏறக்குறைய 30ஆண்டுகளுக்கும் மேலாக காத்தனர் என்பதுதான் வரலாற்று உண்மை.அவர்களின் வீழ்ச்சியால் இன்று ஈழ மக்கள் படும் துயரங்களை நோக்கினால் அவர்கள் எந்தளவுக்கு விடுதலைப்புலிகளின் பாதுகாப்பில் இருந்தனர் என்பது தெரியும்.

பிரபாகரனும்  கருணாநிதியும்

முன்னாள் இந்தியப்பிரதமர் திருமதி.இந்திராகாந்தி அவர்கள் தமிழீழ விடிவுக்கான பாதையை ஒதுக்கித்தரவும், முன்னாள்தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அப்பாதையினை சீர்படுத்தித்தந்தமையும் விடுதலைப் புலிகளின் எழுச்சியை மேலோங்கி வளர்த்தன என்பது வரலாற்று உண்மை. ஆனால் தன்னை மட்டுமே சார்ந்து தன சொல்படி நடக்கவில்லை என்ற ஒரே காரணத்தால்பிரபாகரனின் விடுதலைப்புலிகள் திரு.கருணாநிதி அவர்களின் வெறுப்புக்கு ஆளாயினர். ஜனநாயக மரபுவிதிகளை கொண்ட தி.மு.க என்ற கட்சியின் தலைவர்களையே பந்தாடி ஒழித்த திரு.கருணாநிதி,ஆயுதம் ஏந்திப்போராடிய போராளிக்குழு சகோதர யுத்தம் செய்து மற்ற போராளிக்குழுக்களை ஒழித்த காரணத்தால்தான் விடுதலைப்புலிகளை தாம்ஆதரிக்கவில்லை என முழக்கமிட்டதை தமிழுலகம் நன்கறியும். திரு.பிரபாகரனைத் தனது நேரடி எதிராகவே அவர் கருதினார். ஈழத்தில் யாரை ஆதரிப்பது என்பதை முடிவு செய்யவேண்டியவர்கள்அங்குள்ள தமிழர்களே என்பதில் நமக்கு எவ்வித கருத்துவேறு பாடுமில்லை.அவர்கள்விடுதலைப்புலிகளின் பாதுகாப்பில் இருப்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

மாமனிதர் எம்ஜியாரும் பிரபாகரனும்

திரு எம்ஜியார் உயிரோடிருந்தவரை அவர்தான் தமிழக முதல்வரை தொடர்ந்தார். இன்றும் அவர் இருந்திருந்தால் அவரே முதல்வராகவும் தொடர்ந்திருப்பார் என்பதை நடப்பு நிகழ்வுகள் மெய்ப்பிக்கும். திரு மு.கருணாநிதி அவர்களின் பெயரும் வரலாற்று ஏடுகளிலிருந்து துடைத்து எறியப்பட்டிருக்கும். ஆனால் தமிழர்களுக்கு காலம் கேடு செய்துவிட்டது.

சாதாரண நிலையிலிருந்த ஒரு பொடியன் பிரபாகரன் ஈழத்தேசியத்தலைவனாகி நாளை உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவனாக கருதப்படும் சூழல் விரைவாக உருவாகி வருவது, உலகத்தமிழினக் காவலர்,முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர் என தம்மைக் கருதிக் கொண்டிருக்கும்மு.கருணாநிதிக்கு ஏற்புடையதாய் ஆகாமல் போனது. ஈழ விடுதலையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு போராடியதொரு விடுதலை இயக்கம் தமிழக அரசியலில் என்றும் தன கவனத்தை செலுத்தியதில்லை என்பதோடுதமிழர்அனைவரது ஆதரவையும் எதிர்பார்த்திருந்தனர். தமிழக ஆட்சியிலிருந்துகொண்டு உண்மையாகவே பல வகையிலும் உதவிய திரு.எம்ஜிஆர் அவர்களைச்சார்ந்து தங்களை வலுப்படுத்திக்கொள்வதுதானே அறிவுடைய ஒரு இயக்கத்தின் செயலாக இருக்க முடியும். அதனை விடுதலைப் புலிகள் செய்யத்தவறியிருந்தாலும் ஒரு மூத்த தலைவர் என்ற முறையில் கலைஞர் அதைத்தானே அவர்களிடம் வலியுறுத்தி இருக்கவேண்டும். ஆனால் அவர் அதற்குமாறாகத்தானே  நடந்து கொண்டார்? இப்படிப்பட்ட காரணங்களாலேயேதான் தமிழகத்தில் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா போன்றோர் வரிசையில் நின்ற எம்ஜிஆர் அவர்கள் தமிழக மக்களின் நெஞ்சில் அவர்கள்எல்லோரையும்விட மேலோங்கி இன்றும் நிற்கிறார். அவரின் கொடைத்தன்மை தமிழகஏழைகளுக்கு மட்டுமல்ல ஈழவிடுதலைக்கும் பெரிய அளவில் துணையாக நின்றது.. அவரின் ஈழ விடுதலைக்கான உதவிகளை இங்கே சொல்லி முடிக்க இயலாது என்பதால் இங்கு அவற்றை விளக்கவில்லை.

மாமனிதர் எம்ஜிஆரும், சதியில் வீழ்ந்த இராசீவ்காந்தியும்

    மாமனிதர் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்திலேயே இந்திய அரசியலில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் திரு.இராசீவ் காந்தியை இந்தியத் தலைமையமைச்சர் ஆக்கின. தனது தாத்தா நேரு 1930களில் தனது தாயார் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பான உலக வரலாற்றின் பார்வைகள் என்ற புத்தகத்தை ஒரு முறையாவது அவர் புரட்டியிருந்தால் சிங்களக்கொலைஞன் செயவர்த்தனே விரித்த சதி வலையில் சிக்கியிருக்கவே மாட்டார். இன்றளவும் உலகமக்கள், குறிப்பாக உலகத் தமிழர்கள் போற்றும் பெருந்தலைவராகவே  விளங்கியிருப்பார்.

தமிழினத்தின் மீது விழுந்த பெரும் இடியாக திரு எம்ஜியார் அவர்கள் மறையவும், இராசீவின் அறியாமையோடு பின்னிய ஆணவம் இந்திய அமைதிப்படை மூலமாக தமிழீழ மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திப் பேசவோ, எழுதவோ இயலா நிலைக்குத் தள்ளி அவர்களை நடைப் பிணங்களாக்கியதோடு அல்லாமல் சொல்ல முடியாத துயரத்தில் விழுவதற்கு காரணமானது. “என்னுடைய யாழ்ப்பாணப்பணி”(My mission to Jaffna)என்ற நூலைஎழுதிய முன்னாள் இந்திய அமைதிப்படையின் தலைவர் மேஜர் ஜெனரல் சர்தேஷ் பாண்டே என்பவர் அதன் முடிவுரையில், எப்படியெல்லாமோ தாங்கள் விளக்கிச் சொல்லியும் ஒரு விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான இராசீவின் நடவடிக்கையால் அவரே அதற்க்கு பரிதாபமாகப் பலியானார் என்று முடித்திருந்தார்.

கருணாநிதி  ஆட்சிக்  கலைக்கப்பட்டது

அப்போதெல்லாம் வாய் மூடி மௌனத்திலிருந்த கலைஞர் தமிழகமுதல்வராகிப் பின்னாளில் வி.பி.சிங் அவர்கள் தலைமை அமைச்சரானதும் தன்னைத் தமிழின வீரராக காட்டிக்கொண்டு இலங்கை தமிழரைக் கொன்ற இந்திய இராணுவத்தை வரவேற்கமாட்டேன் என்றார். ஈழத்தமிழர்களின் காவலனாக நடிக்க கலைஞர்.கருணாநிதி அதனால் விடுதலைப்புலிகளின் மீட்பராகவும், ஆதரவாளராகவும் தவறாகச் சித்தரிக்கப்பட்டார். காலம் மாறியது. கலைஞரின் மீது மத்திய அரசு அனுப்பிய இரகசியத்தகவலை புலிகளுக்குத்தந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு திரு.சந்திரசேகரின் மத்தியஅரசு திரு.சுப்ரமணியன்சாமியின் துணையுடன் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது. உண்மையில் அது சம்பந்தமாக பின்புதமிழகஅரசின் உள்துறைச்செயலர் நாகராஜன்தடாவில் கைது செய்யப்பட்டார். அந்தக் கதை மிகப்பெரியது. எது இவர்களைத் தொடர்புபடுத்தியது என்பதை வேறு ஒரு முறை வெளிப்படுத்துவோம்.

 26 பேருக்குத் தூக்கு

   

ஆளுநர் ஆட்சி அமைந்து நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்கிடையே திரு.இராசீவ் காந்தி கொல்லப்பட்டார். இன்றும் இக்கொலைக்கு காரணம் யாரென்று தெரியவில்லை என்றாலும் விடுதலைப்புலிகள்தான் என்று பரப்புரை செய்யப்பட்டுத் தமிழகம், ஈழம் என் இரண்டிற்கும் தலா 13பேராக மொத்தம் 26பேர்கள் கைது செய்யப்பட்டு அனைவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதும், பின் உச்சநீதிமன்றத்தால் அனைவரும் விடுவிக்கப்பட்டு தலைக்கு இருவராக நான்கு பேருக்கு தூக்கும், நால்வருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டதுஉலகறிந்த செய்தி. மனித உரிமை அமைப்புகள் தமிழக மக்களின் பெருமளவு நிதியளிப்புடன் இவ்வழக்கினை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றதால் பெரும்பான்மைத்  தமிழர்கள் தப்பினர். இல்லையாயின் இன்று என்னவாகியிருக்கும்? தடா விதிகளின்படி சாதாரண குற்றவியல் விதிகளுக்கு மாறாக புனையப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில்தான் அவர்களின் வழக்கு உச்சநீதிமன்றம் வரை விசாரணை செய்யப்பட்டது. அவ்வாக்கு மூலங்களின் அடிப்படையில்தண்டனைகளும் வழங்கப்பட்டன. ஆனால் உச்சநீதிமன்றம் அவ்வழக்கு தடா சட்டத்தின் கீழ் வராது என்று கூறி, அதே சமயம் உரிய நீதியை மறுத்தது. இராசீவ் காந்தி என்ற ஒருவரின் ஆளுமை யாரையும் விட்டுவைக்கவில்லை. இன்றும் அதே இராசீவ்காந்தியின்இரத்த உறவுகள்தானே இந்தியாவை ஆளுகின்றன. பிரபாகரனும், பொட்டுஅம்மனும்தான் திட்டமிட்டார்கள் என்று கூறப்பட்டபடி, இவர்கள் இருவரும் பிடிபட்டிருந்தால் இப்போது மரணக் கொட்டடியில் இருப்பவர்களுக்கு இத்தண்டனை கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறிதானே? அந்த மேல்முறையீட்டு மனுவினை விசாரித்தவர்களில் ஒருவரான நீதிபதி கே.டி.தாமஸ் இன்று அவர்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அரசியல் சட்டத்திற்கு முரணானது என்கிறாரே! யார் கேட்பது?

காவிமயமானதுதான் இந்தியா!

 

இவ்வளவு நடந்துகொண்டிருந்தபோதும் கலைஞர், நீதியின் பக்கமில்லாமல் தேர்தல் கணக்கு வரவுகளை கணித்துக்கொண்டிருந்தார். தமிழக அரசியல் லாப நட்டக் கணக்குகளை எல்லா கட்சிகளுடமும்திணித்தது. ஒரு தமிழக அரசியல் கட்சி கூட அரசியலுக்கு அப்பால் தன்னை நிறுத்திக்கொள்ளவில்லை என்பதை தமிழுலகம் அறியும். அதற்கு சிலர் கூறிய காரணம் காங்கிரசுக் கட்சி மதச்சார்பற்றது. பா.ஜ.கமதசார்புடையது என்பதாகும். ஆனால் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் “பாரத்”என்ற “இந்தியா”வின் மக்களாகிய நாம் என்று முகவுரையிலேயே கூறப்பட்டுள்ளதை அனைத்துக்கட்சிகளுமே எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டன.

பாரத் யாரென்றால் இந்த தேசத்து பெரும்பான்மை இனத்தின் பிதாமகன் என அச்சட்டத்தில் சொல்லப்பட்டது. யார் பெரும்பான்மை என்றால் சம்ஸ்கிருத அடிப்படையான இந்துஸ்தானி மொழி பேசும் மக்கள் என்கிறது அரசியல் சட்ட விவாதங்கள்.  எனவே ஒரு கட்சி வாய் கிழிய மதத்தைச் சொல்ல, மற்றொன்று வாய்மூடி மறைமுகமாக சட்டங்களில் திணித்தது. இவர்களின் மதச்சார்பின்மை இவ்வளவுதான்.

இதில்பாபாசாகேப். அம்பேத்கர் அரசியல் சட்டவரையறை விவாதத்தில் பெரும்பான்மைக்கு இடமளிக்க, இம்மாதிரியான அரசியல் சட்டம் நிறைவேறி, பின்னாளில் அவரே மனு தர்மத்தை எரிக்கவும், தந்தை பெரியார் அரசியல் சட்டத்தைக் கொளுத்தவும், தமிழகம் நீங்கலான இந்திய தேசப்படத்தைஎரிக்கவும் செய்தது. ஆக, எப்படியோ காவிதான் இருபக்கமும் இன்றும் எவ்வகையிலும் ஆட்சி செய்கின்றது. இந்திய தேசியக்கொடியின் முதல் வண்ணமே காவிதான் என்பதை மறக்கலாமா?

இவையெல்லாம்  நிகழ்ந்த காலந்தொடங்கி திரு. இராசீவ்காந்திக்குப் பின் அவரது உறவுகளே தலைமையை அலங்கரிப்பதால் ஈழமக்களின் மீதான கோபம் அவர்களைகொலைக்களத்தில் கொண்டுபோய்விட்டது.நூறாயிரம்பேருக்குமேல் தமிழர்கள் அழியக்காரணமாகி இவர்களின் நேரடித்தொடர்புகள் இன்றும் தொடர்கின்றன. அவர்களுக்கு கருணாநிதி பலவகையிலும் துணை போனார். உலகத் தமிழர்களுக்கு என்று இன்று ஒரு பாதுகாவலன் இல்லை.

கருணாநிதியை மட்டுமே சாரும்

தமிழகம், ஈழத்தமிழர்களுக்காக கொதித்து எழுந்தபோது தானும் ஆட்சியில் இருந்து கொண்டே தமிழீழ மக்களின் பாதுகாவலனாக நாடகமாடி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் அனைத்துதமிழக, புதுவை வழக்கறிஞர்களும் ஒன்றுபட்டு நடத்திய உச்சகட்டப்போராட்டத்தால், ஈழ விடிவுக்கு ஒரு வழி பிறக்கப்போகிறது என்ற நிலை வந்தபோது, தனது காவல்துறையை விட்டு அவர்களை அடித்து, துவைத்து இரத்தக் களரியை ஏற்படுத்தி, ஈழ ஆதரவுப் போராட்டஎழுச்சியை சிதைத்த மாபெரும் வரலாற்றுப் பெருமை கருணாநிதியையே சாரும்- கருணாநிதியை மட்டுமே சாரும்.

இந்திய விடுதலைபோரில் பெரும்பங்கு வகித்த பெருமை வழக்கறிஞர்களையே சாரும் என்பதால், அரசின் அடக்குமுறைக்கு அஞ்சி ஏனையோர் ஒதுங்க முற்பட்ட நேரத்தில் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்த நேரம், தான் அங்கம் வகிக்கும் மத்திய அரசின் பெயர் கெட்டு விடுமே என அஞ்சி, தனது சுகவீனத்தைகாட்டி மருத்துவமனையில் படுத்தவாறே   காவல்துறையின் மிருகத்தனத்தை தட்டிக் கொடுத்தவர் இவர். வழக்கறிஞர்கள் நீதிபதிகள் என எவ்வளவு பேர் இரத்தம் சிந்தினார்கள்? அதனைக் கண்டித்து சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்த வழக்கறிஞர்களை எதிர்த்து அவரும் மருத்துவமனையிலேயே உண்ணா விரதத்தை அறிவித்து மிரட்டியவர்தானே  இந்த நாடகமாடி கருணாநிதி? எதை மறப்பது? எதை மன்னிப்பது?

தானுங்கெட்டு தமிழரையுங் கெடுத்த கருணாநிதி

 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, மத்திய அரசில் பெரும்பங்கு வகிக்கும் ஒரு கட்சியின் முன்னாள்  தமிழக முதல்வர் ஈழப்போரின் அழிவுகளினூடே பல கடிதங்களை மதிய அரசு முகவரியிட்டு அஞ்சல் பெட்டிகளில் போட்டுக்கொண்டும், தனது நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதாகவும் தொடர் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தாரே! அது எவ்வளவு கேவலத்தை இந்திய அளவில் நமக்கு பெற்றுத் தந்தது என்பதை தமிழினம் எப்படி மறக்க இயலும்? தனது உறவுகளுக்காக மத்தியில் பதவிகளைப்பெற தள்ளாத வயதில் நேரடியாக தள்ளுவண்டியில் சென்று திருமதி.சோனியாவின் வீட்டு வாசலில் காத்திருந்தாரே, அக்காட்சிகள் ஒவ்வொரு தமிழனையும் தலைக்குனிய வைத்ததே! அதனை மறக்க முடியுமா? ஈழப்பிரச்சனையில் அதே நிலை எடுத்து தலையிட்டிருப்பாரேயானால் இன்றளவும் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக இருந்திருப்பாரே! ஆனால் சுயநலமே அவர் உயிர் மூச்சானதால் பேரறிஞர் அண்ணாவுக்குப்பின் தமிழர்களுக்கான தி.மு.கழகம் அவர் குடும்பவயப்படுத்தபட்டு தானுங் கெட்டதோடு அல்லாமல் தன்னை நம்பிய தமிழரையும் நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்.

 தொடரும் …

ஆட்சிஇனவழிப்புஈழத்தமிழர்கருணாநிதிகலைமணிசோனியாடெசோநாடகம்வழக்கறிஞர்
Comments (0)
Add Comment