டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தங்களது மோசமான தொடக்கமே தோல்விக்கு காரணம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.
ராய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.
தோல்வி குறித்து டோனி கருத்து தெரிவிக்கையில்,
‘ராய்ப்பூர் ஆடுகளம் எங்களுக்கு அதிக பரிச்சயமானது இல்லை. நாங்கள் மோசமான தொடக்கம் கண்டோம். பிட்ச் கடினமாக இருந்தது. முதல் 6 ஓவர்களில் 20 ரன்னுக்கு குறைவாகவே நாங்கள் எடுத்தோம். அந்த சரிவில் இருந்து எங்களால் கடைசி வரை மீள முடியவில்லை.
ராய்ப்பூர் ஆடுகளத்தில் நாங்கள் பயிற்சி மேற்கொள்ளவில்லை. ஆனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி ராய்ப்பூர் ஆடுகளத்தில் விளையாடிய அனுபவம் கொண்டதாகும். அதனால் அவர்கள் சரியான வகையில் பந்து வீசினார்கள். எங்கள் அணியினரால் சரியான அளவில் பந்து வீச முடியவில்லை. நாங்கள் தொடக்கத்தில் விக்கெட்டை வீழ்த்தினாலும், கேட்ச் வாய்ப்பை தவற விட்டோம்.
இந்த தோல்வியை நாங்கள் மறந்து பஞ்சாப் அணிக்கு எதிரான அடுத்த லீக் ஆட்டம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அடுத்த லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறுவோம்’ என்றார்.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களே எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.