காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 3-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய தடகள அணியில் முதலில் 41 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் அதிரடியாக அந்த எண்ணிக்கை 32 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய டிரிபிள் ஜம்ப் வீரர் ரஞ்சித் மகேஸ்வரி மற்றும் 6 பேர் கொண்ட 4 ஜ 100 தொடர் ஓட்ட அணியினர், வட்டு எறிதல் வீராங்கனை ஹர்வந்த் கவுர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். காயம் மற்றும் களத்தில் திறமையை சரியாக வெளிப்படுத்தாததன் அடிப்படையில் இவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தடகள சம்மேளன செயலாளர் சி.கே.வல்சன் தெரிவித்தார்.
வளர்ந்து வரும் இளம் தடகள புயல் ஒடிசாவைச் சேர்ந்த டுடீ சந்த் கடைசி நிமிடத்தில் கழற்றி விடப்பட்டுள்ளார். 18 வயதான டுடீ சந்த், 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாம்பியன் ஆவார். 2013-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார்.
பெங்களூரில் நடந்த பாலின சோதனையில் அவர் தேறாததால் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘வழக்கமாக நாங்கள் ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு இது போன்ற சோதனையை நடத்துவது உண்டு.
அவர்களின் பெயர் விவரத்தை ரகசியமாக வைத்து இருப்போம். ஆனால் டுடீ சந்த்தை பெண்கள் பிரிவில் அனுமதிக்க முடியாது என்பது சோதனையில் தெரிய வந்திருப்பதால், இந்த விஷயத்தை சொல்ல வேண்டியதாகி விட்டது. அவரது உடலில் ஆண்ட்ரோஜன் அதிகமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அவர் பெண்கள் பிரிவில் கலந்து கொள்ள தகுதியற்றவராகி விடுகிறார். இந்த சோதனையை சர்வதேச தடகள சம்மேளம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் வழிகாட்டுதலின் பேரில் நடத்துகிறோம். மற்றபடி வீராங்கனையின் பாலினத் தன்மையை உறுதிசெய்வதற்காக நடத்தப்படுவது கிடையாது.
என்றாலும் எதிர்காலத்தில் டுடீ சந்தால் பெண்கள் பிரிவில் கலந்து கொள்ள முடியும். முறையான மருத்துவ உதவிகளை நாடி, தனது உடலில் ஆண்ட்ரோஜனின் அளவை குறிப்பிட்ட அளவுக்கு குறைத்து விட்டால், அதன் பிறகு அவரால் பெண்கள் பிரிவில் பங்கேற்க முடியும்’ என்று கூறப்பட்டுள்ளது.