2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை முதற்தடவையாக நேற்றைய தினம் சந்தித்த போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேற்குலகில் அமெரிக்காவும், இந்தியாவின் உளவுப் பிரிவான றோ என்பன இணைந்து தனது ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக இதற்கு முன்னர் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் தற்போது புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் இதற்கு துணைபோயிருப்பதாக மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இதற்கமைய தனது தசாப்தகால ஆட்சியை கவிழ்ப்பதற்கு புலம்பெயர் தமிழர்களும் பிரதான காரணியாக செயற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கட்சிக்குள்ளேயும், தன்னைச் சூழ இருந்தவர்களும் தனக்கெதிராகவே செயற்பட்டதன் விளைவாக ஆட்சியை இழக்க நேரிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் மேலும் கருத்துக்களை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, “அமெரிக்கா, இந்தியா மற்றும் இந்திய உளவுப் பிரிவு உட்பட மேற்குலகமும் அதேபோல புலம்பெயர்ந்த தமிழர்களும் இணைந்தே ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மிக வேகமாக செயற்பட்டனர். என்னைச் சூழவிருந்தவர்களும் எனக்கு எதிராக செயற்பட்டனர். கட்சிக்குள்ளும் எனக்கு எதிராக பலர் செயற்பட்டனர்” என தெரிவித்துள்ளார்.