தமிழகப் பண்பாட்டுப் புரட்சி வெற்றிகரமாக முடிந்ததா?

ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய தமிழகப் போராட்டம், வரலாறு காணாத போராட்டம் ஆகும். இதனை மெரீனாப் புரட்சி என்றும் பண்பாட்டுப் புரட்சி என்றும் தமிழர் கடல் புரட்சி என்றும் சிந்தனையாளர்கள் சித்திரிக்கின்றனர். வரலாற்றில் ஒருபோதும் இல்லாத வகையில் ஒட்டுமொத்த தமிழகமும் திரண்டு இப் புரட்சியில் ஈடுபட்டமை வரலாற்றுச் சிறப்பானது.

இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், தாய்மார்கள், முதியவர்கள், குழந்தைகள் என ஒட்டுமொத்த தமிழ்நாடே இதில் பங்கெடுத்தது. மாநிலத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டு, ஜல்லிக்கட்டு என்ற தமிழர் பாரம்பரிய அடையாளத்தை மீளக் கொடு என வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தின் இப் பெருங்குரல் என்பது ஜல்லிக்கட்டையும் தாண்டியது.

கடந்த பல வருடங்களாக இந்தியா தமிழகத்தை வஞ்சித்து வந்தது. இந்திய மேலாதிக்கவாதிகள் தமிழ்நாட்டை பல வகையிலும் ஒடுக்கினர். மத சுதந்திரம், இனப் பன்மைத்துவம் கொண்ட ஒரு மாநிலமாக தமிழ்நாடே இருக்கிறது. அங்கு எல்லா இனத்தவரும் வாழ்கின்றனர். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றதால் எதையும் செய்ய முடியாத மாநிலமாக தமிழகம் ஆக்கப்பட்டது.

2009இல் ஈழத்தில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது தமிழகம் வெகுண்டு எழுந்தது. ஆனால் அந்த எழுச்சி அடக்கப்பட்டது. முத்துக்குமார் தன்னை தானே தியாகம் செய்து தமிழகத்தின் புரட்சியை வலியுறுத்தினார். ஆனால் இந்திய – தமிழக அரசுகளால் எல்லாம் அடக்கி ஒடுக்கப்பட்டதுடன் ஈழத்தில் தமிழ் இனப் படுகொலையும் நடத்தி முடிக்கப்பட்டது.

இதனால் தமிழகம் இதயத்திற்குள் தீயுடன்தான் இருந்தது. தமிழகத்தில் சந்திக்கக்கூடியவர்கள் எல்லோருமே ஈழத்தின் இறுதிப் போர் பற்றியே பேசுவார்கள். எல்லா சந்திப்புக்களிலும் எல்லாருடைய முதல் வார்த்தைகளும் ஈழ இறுதிப்போர் பற்றியதாகவே இருக்கும். கடைசிவரை எங்களால் இனப்படுகொலையை தடுக்க முடியவில்லையே என்று வருந்துவார்கள்.

அவைகளின் கனல்தான் இப் புரட்சி. தமிழகம் தன் நிலையை உணரைத் தொடங்கியவிட்டது. தமிழகத்தில் தமிழ் தேசிய எண்ணங்கள் பெரியார், தோழர் தமிழரசன் காலத்திலேயே முளைவிட்டன. ஆனால் இந்தியப் பார்ப்பனியம் அதனை ஒடுக்கி இந்திய மாயையினுள் தமிழகத்தை வைத்திருந்தது. தமிழகத்தில் தமிழ் தேசிய எழுச்சி ஏற்படுவது மிக அவசியம் என்று தலைவர் பிரபாகரன் நேர்காணல்களில் வலியுறுத்தியுள்ளார்.

அதன் அவசியத்தை தமிழ்நாடு 2009 மே இனப்படுகொலையின் பின்னரே உணர்ந்தது. நந்திக்கடலில் தோற்றோம்! மெரீனாக் கடலில் தோற்கோம் என்ற கோசங்கள் இதனையே உணர்த்துகின்றன. ஐந்து நாட்களுக்கும் மேலாக உக்கிரப் போராட்டம் நடந்தது. இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் இறங்கி வந்தது. தமிழகப் புரட்சியை கண்டு பயந்தே இறங்கிவந்தார்கள்.

அவசரகாலச் சட்டம் வேண்டாம் என்றும் நிரந்தர சட்டம் வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகம் வலியுறுத்தியது. ஜல்லிக் கட்டு சட்ட மாற்றம் மாலை அறிவிக்கப்பட இருந்த நிலையில் அதுவரையில் போராட்டத்தில் ஈடுபட போராட்டக்காரர்கள் விரும்பினர். அதுவே உறுதியான போராட்டத்தின் நெறி. ஆனால் எப்படியேனும் வன்முறையை ஏற்படுத்த இந்திய – தமிழக அரசுகள் விரும்பின. வன்முறையை பிரயோகித்து, முடித்து வைக்க வேண்டும் என்ற நோக்கம் இந்திய – தமிழக அரசுகளுக்கு உண்டு.

காவல்துறையினரே வன்முறையை மேற்கொண்டமைக்கான ஆதாரங்கள் பலவும் சமூக வலைத்தளங்களிலும் இணையங்களிலும் பரவி வருகின்றன. நேர்த்தியானக நடந்த இந்தப் பண்பாட்டுப் புரட்சியை வன்முறையுள் தள்ள வேண்டும் என்று இந்திய அரசு தீர்மானித்துள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தாக்கி துன்புறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் வன்முறையால் போராட்டம் சிதையவில்லை.

போராட்டம் உரிய இலக்கை கண்டே நிறைவுற்றிருக்கிறது.

எதிர்காலத்தில் அதிகாரத்திற்கு எதிராக மக்கள் ஒன்று திரளக்கூடாது என்ற அச்சமே அந்த நோக்கத்தின் பின்னணி. ஜல்லிக்கட்டு குறித்த சட்ட மாற்றம் மாத்திரமின்றி இந்த அச்சமும் தமிழகப் பண்பாட்டுப் புரட்சி ஈட்டிய வெற்றியே! வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பண்பாட்டுப் புரட்சி, ஒரு பிரஞ்சுப் புரட்சியுடன், கைதொழில் புரட்சியுடன், அரபு வசந்தத்துடன் ஒப்பிடத்தக்கது.

இந்திய – தமிழக அரச எந்திரத்தால் மெய்யான தமிழகத்தை ஒன்றும் செய்ய இயலாது. ஈழத்தில் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் உறுதியாக நம்பலாம். தமிழ் ஈழம் அமையும். அதற்கு தமிழகமும் பொங்கி எழும். காலமும் சூழலும் வரும்போது, எங்கள் தலைவனின் கனவும் எங்கள் மாவீரர்களின் கனவும் நனவாகும்.

வாழ்த்துக்கள் தாய் நாடே!

ஆசிரியர்,
செண்பகம்.
24.01.2017

ஜல்லிக் கட்டுதனி ஈழம்தமிழகம்பண்பாட்டுப் புரட்சி
Comments (0)
Add Comment