வடக்கு, கிழக்கில் தமிழரின் பூர்வீக நிலங்கள் இன்னும் 5 வருடங்களில் இலங்கை அரசால் முற்றாகச் சிதைக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை இந்தியா உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் நேற்று வலியுறுத்தினர். வடக்கு, கிழக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புகளையும், அதனால் அங்குள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவலங்களையும் நேரில் பார்வையிட இந்திய அரசின் உயர்மட்டக் குழுவொன்று அவசரமாக இலங்கை வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராசா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்றுமுன்தினம் புதுடில்லி சென்றனர். இன்று இந்தியப் பிரதமரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ள இக்குழுவினர் நேற்றுக் காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துக் கலந் துரையாடினர். இந்தச் சந்திப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி அரசு ஈழத் தமிழர் பிரச்சினையில் ஆக்கபூர்வமாகச் செயற்படும் எனவும், அவர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் எனவும் உலகத் தமிழர்கள் நம்பியுள்ளனர். எனவே, ஈழத் தமிழர்களை மோடி அரசு கைவிடக்கூடாது.
வடக்கு, கிழக்கில் போர் நடைபெற்ற காலத்திலும் போர் நிறைவுக்கு வந்த பின்னரும் தமிழ்ப் பெண்கள் மீதான அரச படைகளின் பாலியல் வல்லுறவுகள் தொடர்கின்றன. இதனால் அங்குள்ள தமிழ்ப் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பில் இந்திய அரசு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினோம்.
வடக்கு, கிழக்கில் காணாமல்போனோரின் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. காணாமல்போனோரைத் தேடித் தருமாறு உறவுகள் நடத்தும் ஜனநாயகப் போராட்டங்கள் மீதும், சர்வதேச பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் மீதும் அரச புலனாய்வுப் பிரிவினரும், சிங்கள – பெளத்த இனவாதிகளும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, யுத்தம் நிறைவுக்கு வந்து 5 வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் சிறைச்சாலைகளில் தொடர்ந்து சித்திரவதைகளுக்குள்ளாகி வருகின்றனர். இதனால் சிலர் மரணித்தும் உள்ளனர் என்றும் சுஷ்மா சுவராஜிடம் நாம் தெரிவித்தோம்.
அதேவேளை, தமிழ் இளைஞர், யுவதிகள், குடும்பஸ்தர்கள், குடும்பப் பெண்கள் மற்றும் மாணவர்களை இலக்குவைத்து பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரின் கைதுவேட்டைகள் தற்போது தொடர்கின்றன. இதனால் வடக்கு, கிழக்கு மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். எனவே, இந்த அச்ச நிலையைப் போக்க இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
தற்போது இரு நாட்டு மீனவர் பிரச்சினை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இது தொடர்பில் இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணவேண்டும் என்றும் இந்தச் சந்திப்பின்போது நாம் கோரிக்கை விடுத்தோம்.
இதேவேளை, 13ஆவது அரசமைப்பு திருத்தச்சட்டம் ஈழத் தமிழருக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தராது. எனினும், இந்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக அமுல்படுத்தினால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாணசபை முறையாக இயங்க முடியும். இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளின் பிரகாரம்தான் வடக்கு மாகாணசபைத் தேர்தலை இலங்கை அரசு நடத்தியது. எனவே, கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வந்த இந்த மாகாணசபை இராணுவ ஆட்சியின் பிடியில் சிக்கித் தவிப்பதை இந்தியா கண்களால் பார்த்துக்கொண்டிருப்பதை விடுத்து அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். வடக்கு மாகாணசபையை முறையாக இயங்கவிடுமாறு இலங்கை அரசுக்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு வலியுறுத்தவேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் நாம் கோரிக்கை விடுத்தோம்.
13ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கி அதற்கப்பால் சென்று அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஊடாக தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண இலங்கை அரசை இந்தியா வலியுறுத்தவேண்டும் என்றும் நாம் அவரிடம் எடுத்துரைத்தோம். இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடனான இந்தச் சந்திப்பு திருப்தியாக ஆக்கபூர்வமாக இருந்தது.
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் நாம் சந்திக்கவுள்ளோம். இதன்போதும் பல்வேறு முக்கிய விடயங்களை அவரின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளோம். மோடியுடனான சந்திப்பின்போது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணைக்குழு மேற்கொண்டுவரும் விசாரணை குறித்தும் எடுத்து விளக்கவுள்ளோம்” என்றனர்.