தமிழர்களாகிய எமது தனித்துவத்தையே நாம் கோருகிறோம்! வட முதல்வர்

நாட்டின் ஒருமைப்பாட்டை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் அதன் அடிப்படையிலேயே மக்கள் எம்மை ஆதரிக்கின்றனர். தமிழர்களாகிய எமது தனித்துவம் எமக்கு தேவை. அதையே நாம் கோருகிறோம். மாறாக நாம் பிரிவினையை ஏற்படுத்தவில்லை என கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன், இன்று வெள்ளிக்கிழமை (29), வடக்கு மாகாண முதலமைச்சரை கைதடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
நாட்டின் ஒருமைப்பாட்டை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் அதன் அடிப்படையிலேயே மக்கள் எம்மை ஆதரிக்கின்றனர் என்று எடுத்துகாட்டிய நான் நாம் பிரிவினையை ஏற்படுத்தவில்லை. எமது தனித்துவத்தையே கோரி நிற்கிறோம் எனவும் அவரிடம் சுட்டிக்காட்டினேன் என முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் நாம் முன்னய காலகட்டத்தில் இவ்வாறான ஒரு நிலமையிலேயே வாழ்ந்து வந்தோம். முன்னர் தமிழர்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சென்று தமது வர்த்தக வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் 1956ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் இந்த நிலைமை மாற்றம் பெற்று தனி சிங்கள ஆட்சி நாடாக இலங்கை மாறியது.
அதிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளும் ஆரம்பமானது. என்பதை அவரிடம் எடுத்துக் காட்டினேன். நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களின் இன, மத, மொழி, கலாச்சாரத்தின் தனித்துவம் எவ்வாறு உள்ளதோ அதனடிப்படையில் எமது இன, மொழி, மத, கலாச்சாரங்கள் பேணப்பட வேண்டும். எமக்கான தனித்துவம் வழங்கபட வேண்டும் என்று நான் கூறிய கருத்தை சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் ஏற்றுக்கொண்டதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் உள்ள தமிழர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி சிறந்த முறையில் தமது வாழ்வை தொடர்கின்றனர். அவ்வாறான ஒரு நிலமையை இங்கு உருவாக்குவதற்கு தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கனடாகிழக்குதமிழர்கள்தாயகம்பண்பாடுமக்கள்வடக்குவெளிவிவகார அமைச்சர்
Comments (0)
Add Comment