மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
இதன்போது கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவிக்கையில்,
அதிகாரப்பகிர்வு என்பது இன்று மிகவும் அவசியமான ஒன்றாகும். மாகாணசபை அதிகாரப்பகிர்வு மற்றும் எல்லை நிர்ணயம் என்பன கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும். இப்போதும் இந்த விடயத்தில் இழுத்தடிப்பு செய்தால் அரசியலமைப்பு திருத்தம் பொய்யான ஒன்றாக மாறிவிடும். எனவே பொருத்தமான வகையில் 20ஆம் திருத்தம் கொண்டுவருவதும் ஏனைய அத்தியாவசிய திருத்தங்களை மேற்கொள்வதும் மிகவும் அவசியமானதாகும்.
அதேபோல் இந்த சிக்கல்களை தீர்ப்பதில் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை உருவாக்குவதா அல்லது இருக்கும் அரசியலமைப்பை திருத்துவதா என்ற விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்தாலோசிக்க வேண்டும். அதேபோல் மக்கள் கருத்தை ஆராய வேண்டியதும் அவசியமானது. இப்போது இருக்கும் ஜனாதிபதி மக்கள் கருத்துக் கேட்காமலேயே தனது அதிகாரங்களை குறைத்துள்ளார். இது சிறந்த எடுத்துக்காட்டாகும், எனினும் எல்லா விடயங்களிலும் அவ்வாறு மேற்கொள்வது சிரமமானதாகும்.
ஆகவே நாட்டை பலப்படுத்தும் வகையிலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் மாற்றம் ஒன்றை நோக்கி பயணிக்க வேண்டும். மீண்டும் பிரபாகரன் போன்ற பயங்கரவாதத் தலைவர்கள் உருவாகாத வகையில், தேசியப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வகையிலும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பலப்படுத்தும் வகையிலும் ஒரு அரசியலமைப்பு உருவாகுமாயின் அதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்கும். அதேபோல் அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாட்டை ஆராயவேண்டியதும் அவசியமான ஒன்றாகும்.
இது தொடர்பில் பிரதி நிதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்தன தெரிவிக்கையில்,
அரசியலமைப்பு திருத்தம் இன்று முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. இலங்கையின் அரசியலமைப்பு வரலாற்றில் 19 தடவைகள் திருத்தம் மேட்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 17ஆம் மற்றும் 19ஆம் திருத்தத்தை தவிர ஏனைய அனைத்து திருத்தங்களும் ஆட்சியாளரையும் அரசாங்கத்தினதும் அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் தான் அமைந்துள்ளன. எனினும் 19ஆம் திருத்தும் கொண்டுவரப்பட்டு ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது என்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி கொண்டுவந்தார்.
அதேபோல் அரசியல் அமைப்பு திருத்தம் கொண்டுவருவதில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணக்கப்பாட்டுடன் தான் செயற்பட்டு வருகின்றன. இப்போது கொண்டுவரவுள்ள திருத்தம் தொடர்பில் நாம் முன்வைத்த ஒன்பது யோசனைகளையும் ஏற்றுகொள்ளும் வகையிலும், இணக்கப்பாடு ஏற்படுத்தும் வகையிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆகவே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள இந்த தீர்மானங்களை ஒன்றின்பின் ஒன்றாக நிறைவேற்ற வேண்டும்.
முதலில் தேர்தல் முறைமையை மாற்றுவது என்றால் அதற்கும் நாம் இணக்கம் தெரிவிக்க தயாராக உள்ளோம். தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவது அவசியமானது. ஆகவே முதலில் தேர்தல் முறைமையை மாற்றி அதன் பின்னர் ஏனைய விடயங்களை மாற்றியமைக்க முடியும். எவ்வாறு இருப்பினும் சிறுபான்மை மக்கள் மற்றும் சிறுபான்மை கட்சிகளை பலப்படுத்தும் வகையிலும் மக்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையிலும் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றார்.