தமிழர்களின் கல்விச்சுரங்கம் யாழ்நூலகம் பற்றி ஒருபார்வை….

யாழ்ப்பாணத்தின் கல்விக்களஞ்சியமாய் இருந்த யாழ் நூலகம் சிங்கள காடையர்களால் எரியூட்டப்பட்ட தினம் இன்று. 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01 ஆம் திகதி இனவெறியர்களால்  திட்டமிட்டு அழிக்கப்பட்ட நமது சொத்து.

37 ஆண்டுகள் செல்கின்றபோதும் அனைவர் மனதிலும் பெரும் வேதனையை தரக்கூடிய நாள். பல கல்விமான்களால் பெரிதும் பேசப்பட்ட பேசப்படுகின்ற நூலகமாக இருந்ததுதான் நமது யாழ் நூலகம்.

ஹிட்லர் கூட செய்யாத கொடூர இன அழிப்பின் உச்ச வடிவம்தான்  யாழ் நூலக எரிப்பு. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வரலாற்றை சுவடு இழக்க செய்ய வேண்டும் என திட்டமிட்டு அழிக்கப்பட்டதுதான் வேதனைக்குரிய விடயம்.

தமிழர்களின் பொக்கிக்ஷமாக இருந்த யாழ் நூலகம் இனவெறியர்களால் எரியூட்டப்பட்டபோது, அங்கு 97 ஆயிரம் அரிய புத்தகங்கள், பல நூற்றாண்டு பழமைவாய்ந்த ஈழ ஓலைச்சுவடிகள், ஈழத்தின் சிறப்பை கூறும் பண்டைய நூல்கள், தேடினாலும் கிடைக்காத பல அரியவகை தமிழ் நூல்கள், ஈழத்தமிழ் பத்திரிகைகளின் மூலப்பிரதிகள் என அரிய ஆவணங்கள் அனைத்தும் கல்வியறிவே இல்லாத காடையர்களால் அழிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் நமது யாழ் நூலகம்  ஆகும்.

20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நூலகம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோதுதான் இனவெறியர்களால் எரியூட்டப்பட்டது.

இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.

யாழ் நூலகஎரிப்பு  கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறுபல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்களும் அடங்கியிருந்தனர்.

யாழ் நூலகம் எரியூட்ட்ப்பட்ட செய்தியைக் கேட்டது   மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் பேரறிஞனும் ஆராய்ச்சியாளனுமாகிய வண. டேவிட் அடிகள்.

யாழ் நூலக எரியூட்டலினால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு இலக்கியவாதி “சுஜாதா” 1981-ம் ஆண்டு டிசம்பர் மாத ஆனந்த விகடன் இதழில் “ஒரு இலட்சம் புத்தகங்கள்” என்கிற தலைப்பில் பாரதி நூற்றாண்டு சிறப்புச் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார்.

அதே நிகழ்வில் பெரிதும் கவலையுற்ற வெளிநாட்டு ஆங்கிலேய அறிஞர் ஒருவர் யாழ்ப்பாண பொது மக்கள் நூலகம் எரிந்து கருகி நீறாகிக் கிடந்த சாம்பர் மேட்டிலே நின்ற வண்ணம் ஆங்கிலக்கவிதை ஒன்றை எழுதினார். இந்தக் கவிதையை பேராசிரியர் கைலாசபதியிடமிருந்து பெற்றுத் தமிழாக்கம் செய்து “கிருதயுகம்” என்ற ஈழத்து சிற்றிதழ்களிலே கைலாசபதியின் மறைவுக்குப் பின்னர் கவிஞர் சோ.ப. பிரசுரித்திருந்தார்.

யாழ் நூலக வரலாறு, மற்றும் அதன் எரிப்பு குறித்த “The Jaffna Public Library rises from its ashes” என்ற பெயரில் ஓர் ஆவண நூலை கட்டிடக்கலை நிபுணர் வி. எஸ். துரைராஜா எழுதி வெளியிட்டுள்ளார். எரியும் நினைவுகள் என்ற பெயரில் ஓர் ஆவணப் படத்தை ஊடகவியலாளர் சி. சோமிதரன் இயக்கி வெளியிட்டுள்ளார்.

இவை போல் பல ஆவண நூல்கள் யாழ் நூலக எரிப்பு குறித்து உருவாயின.

நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.அதோடு  தமிழீழ விடுதலை போராட்டம் வீச்சுப் பெற யாழ் நூலக எரிப்பும் ஒரு காரணமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த கொடும் வலியை உணர்வில் ஏற்றுக் கொள்ளும் தமிழ் மக்கள் தாம் வாழும் இடமெல்லாம் ஆவணப்படுத்தல்களையும் நூலகங்களையும் கட்டி எழுப்பி அன்று மூண்ட தீயின் எழுச்சியை உலகெங்கும் விதைக்க வேண்டும் என்பதே பல கல்விமான்களின் அவா.

இன்று யாழ் நூலக் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், ஏட்டுச் சுவடிகளும் வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை என்பது நிதர்சனமான உண்மை.

யாழ் கனக சனா…

 

 

 

எரிப்புகட்டுரைசிறப்புயாழ் நூலகம்
Comments (0)
Add Comment