சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடக்க ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. ஆட்டம் துவங்குவதற்கு முன் பிரபல திரை நட்சத்திரங்கள் பங்கு கொள்ளும் வண்ணமயமான தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் உள்ள கவுண்ட்டரில் தொடங்கியது. சென்னையில் 24, 26ம் தேதிகளில் நடக்கும் முதல் 2 ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கி கொள்ளலாம். காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும். ரூ.50, ரூ.100 என இரு விலைகளில் டிக்கெட்டுகள் கிடைக்கும். திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஆகஸ்ட் 25, 27, 28, 29 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை நத்தம் என்.பி.ஆர். கல்லூரியின் திண்டுக்கல் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மேலும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை www.bookmyshow.com இணையதளத்தின் வாயிலாகவும் வாங்க முடியும்.