தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கல்முனை பகுதியில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம், அம்பாறை மாவட்ட முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ச.வியாழேந்திரன், கல்முனை முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர் லிங்கேஸ்வரன் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்டவர்கள் ‘நிபந்தனையின்றி அரசியல் கைதிகளை விடுதலை செய்’, ‘பொதுமன்னிப்பு வழங்கு’, ‘நல்லாட்சி அரசில் அரசியல் கைதிகளுக்கு விடிவில்லையா?’ என பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.