எமது மக்கள் இப்போதும் தமது காணிகளை கேட்டு போராடி வருகின்றனர். அதேபோல் மீள்குடியேற்றம் இன்னமும் பூரணமாகாத நிலைமையும் காணப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் முதற்கட்டமாக எமது மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த சந்திப்பிலேயே இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த சந்திப்பில் வடக்குஇ கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஆர். சம்பந்தன், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதேவேளை இந்த சந்திப்பின்போது முக்கியமான சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறுகையில்,
வடக்கு,கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பலாலி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும். யுத்தத்தின் பின்னர் எமது வடக்கு கிழக்கு மக்கள் பொருளாதார ரீதியிலும், அபிவிருத்தி மட்டத்திலும் பின்னடைவுகளை சந்தித்து வந்துள்ளனர்.
அவ்வாறான நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது பகுதிகளை துரித கதியில் கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்கு உள்ளது. எனினும் அபிவிருத்திகள் என்ற பெயரில் எமது மக்களின் காணிகளை சூறையாடும் நிலைமை தொடருமாயின் அனுமதிக்க முடியாது.
எமது மக்கள் இப்போதும் கூட தமது காணிகளை கேட்டு போராடி வருகின்றனர். அதேபோல் மீள்குடியேற்றம் இன்னமும் பூரணமாகாத நிலைமையும் உள்ளது. அவ்வாறு இருக்கையில் முதற்கட்டமாக எமது மக்களின் மீள்குடியோற்ற நடவைக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இந்த காரணிகளை நாம் அமைச்சர் சுவாமிநாதனிடம் சுட்டிக்காட்டியுள்ளோம். அதேபோல் வடக்கில் விமான நிலையங்கள் அமைப்பதும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதும் வரவேற்கப்படவேண்டியவையாகும். ஆனால் அதன்மூலம் மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கான முழுமையான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தக் காரணிகளை நாம் அரசாங்கத் தரப்பினரிடம் தெரிவித்துள்ளோம். இதில் எமது மக்களின் நிலங்கள் பாதிக்கபடாத வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எமக்குத் தெரிவித்தார் என்றார்.