தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் பலவந்தமாக பயிர் செய்கைகளில் ஈடுபட்டுள்ளனர்- இரா சம்மந்தன்

தென்னமரவாடி தமிழ் மக்களின் பூர்வீக வயல் காணிகளில் பலவந்தமாக பயிர்செய்கையில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு அக்காணியை பெற்றுக்கொடுக்கும்  முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் சம்பந்தன் தலைமையிலான குழுவினரிடம் முறையிட்டுள்ளனர்

திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப்பகுதியான தென்னைமரவாடிக் கிராமத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று புதன்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டனர். இம்மக்களின் பிரச்சினைகளை நேரடியாக  ஆராயும் பொருட்டு  இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக கிழக்கு மாகாண  சபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி. தண்டாயுதபாணி தெரிவித்தார். இதன்போதே மேற்படி கிராம மக்கள் இம்முறைப்பாட்டை தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜே. ஜனார்த்தனன் நடராஜா, பிரசன்ன இந்திரகுமார், கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) ராஜேஸ்வரன், தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம் ஆகியோர் இக்குழுவில் அடங்குகின்றனர். இவ்விடயம் குறித்து  எதிர்க்கட்சி தலைவர் கருத்து வெளியிடுகையில்;

கடந்த 1985 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த இந்த மக்கள் அண்மையிலேயே மீளக்குடியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் அதற்கு முன்னர் இங்கு பாதுகாப்பு  தரப்பினரின் ஆதரவுடன் இருந்த பல  பெரும்பான்மையின விவசாயிகள் கொல்லன்வெளி, பெருமாள் புலவு போன்ற பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் பலவந்தமாக  பயிர் செய்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் முறையான ஆவணங்கள் ஆதாரங்களை கொண்டிருக்கும் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பின்னரும் கூட தமது  வயல்களில் வாழ்வாதார நடவடிக்கையை செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய் அங்கு சென்ற மாகாண காணி ஆணையாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இரு பகுதியினரையும் அழைத்து குறித்த காணிகளை அளவை செய்ததுடன் இவ்விரு பிரிவினரையும் அரை பங்காக பிரித்து காணியை செய்கை பண்ணுமாறு  தெரிவித்ததாக மக்கள் எம்மிடம் விபரித்தனர்.

இது முற்றிலும் தவறான நடவடிக்கையாகும். உண்மையில் இடம்பெயர்ந்த மக்களின் இந்த வாழ்வாதாரப் பிரச்சினைக்கு இது ஒரு முறையான தீர்வல்ல. இதுபற்றி உரிய அதிகாரிகளுக்கு தலைவர் சம்பந்தன் தெரியப்படுத்தியுள்ளதாக அங்கு  குறிப்பிட்டதுடன் மக்கள் தமது ஆவணங்களை சரியான முறையில் ஒழுங்குபடுத்துமாறு கோரியுள்ளார். இந்த  மக்கள் தமது காணிப்பிரச்சினைகளை தீர்த்து தருமாறு  அண்மையில் குச்சவெளி பிரதேச செயலகத்தின்  முன்பாக ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இது தவிர தமது வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு காட்டு யானைகளின் தாக்கமும் சவாலாகவுள்ளதாக இவர்கள் தெரிவித்தனர். இது இவ்வாறு இருக்க இந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டு பல வருடங்களாகியும்  தற்காலிக கொட்டில்களிலேயே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான நிரந்தர வீடுகள் இன்னும் அமைக்கப்படவில்லை எனவும்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரா. சம்பந்தன்காணிதமிழ்தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராசாதலைவர்திருகோணமலைதென்னமரவாடிபயிர்செய்கைபலவந்தம்பிரச்சினைமக்கள்வயல்
Comments (0)
Add Comment